கருமேகங்கள் கலைகின்றன விமர்சனம்: இது நிஜமான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியா?

நிஜத்தில் தந்தையாக இருந்தும், தன் மகளுக்குத் துணை நிற்காத ஒருவர், நிஜத்தில் தந்தையாக இல்லாவிட்டாலும் `தன் மகளுக்காக’ உருகும் மற்றொருவர்… இந்த இருவரும் சந்தித்துக்கொள்வதால் ஏற்படும் மாற்றங்களே இந்த `கருமேகங்கள் கலைகின்றன’.

ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்கும் ராமநாதனுக்கு (பாரதிராஜாவுக்கு) மூன்று பிள்ளைகள். மூத்த மகன் அமெரிக்காவிலும், மகள் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டில் பிரபல வழக்கறிஞராக இருக்கும் தன் இளைய மகன் கோமகன் (கௌதம் மேனன்) வீட்டில் வாழ்கிறார் ராமநாதன். மறுபுறம் இராமநாதபுரத்தில் பரோட்டா மாஸ்டராக ஹோட்டலில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் வீரமணி (யோகி பாபு). அவரிடம் பேச ஆதரவற்றோர் இல்லத்திலிருக்கும் சிறுமி (சாரல்) அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்.

கருமேகங்கள் கலைகின்றன

தன் 75வது பிறந்த நாள் விழாவின்போது, தன் இறந்த காலத்தைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறார் ராமநாதன். மறுபுறம் தன் ‘மகளை’த் தேடிச் செல்கிறார் வீரமணி. இந்த இரண்டு தலைமுறை தந்தைகளும் தங்களின் பயணத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். இதனால் இவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை ஒரு மெலோடிராமாவாகப் பேசுவதே இந்தப் படத்தின் கதை.

தந்தையாகப் பாசத்திற்கு ஏங்குவது, செய்த குற்றத்துக்காகக் குற்ற உணர்ச்சியுடன் நடுங்குவது எனச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார் பாரதிராஜா. இருப்பினும் அதில் ஆங்காங்கே யதார்த்தம் தவிர்த்து சற்றே மிகை உணர்ச்சியும் வெளிப்படுகிறது. அவரது மகனாக கோமகன் பாத்திரத்தில் நடித்துள்ள கௌதம் மேனன் அந்தப் பாத்திரத்துக்குச் சற்று அந்நியமாகவே தெரிகிறார். வெகுநாள் கழித்து தந்தையுடன் பேசப் போகிற உணர்வு, தந்தையின் பிரிவு போன்ற அழுத்தமான காட்சிகளைத் தட்டையாகக் கையாண்டுள்ளார்.

கருமேகங்கள் கலைகின்றன: யோகி பாபு

அடுத்து வெள்ளிக்கிழமை நாயகன் யோகி பாபு! சிறுமியின் வளர்ப்புத் தந்தையாக கனமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். சில இடங்களில் அதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், அதற்கு நடுவே நகைச்சுவை செய்வது சிரிப்பை வர வைக்கவில்லை, மாறாக அந்தக் கதாபாத்திரத்தின் வலியையும் மறக்கடிக்கச் செய்கிறது. கண்மணியாக அதிதி பாலன், முதிர்ச்சியான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அதற்குச் சிறப்பான நடிப்பை தரவும் முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அவரது ஒப்பனையில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. குழந்தை நட்சத்திரம் சாரல், இத்தனை நபர்களுக்கு மத்தியிலும் தன்னைக் கவனிக்க வைக்கிறார். இது தவிர டெல்லி கணேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், தங்கர் பச்சான் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

குடும்பத்தினைச் சுற்றிய அக மற்றும் புறச் சிக்கல்களை ஆராயும் தங்கர் பச்சானின் திரைமொழி இம்முறையும் அப்படியான ஒரு முயற்சியையே செய்துள்ளது. இப்படத்தில் இரு முதன்மை கதாபாத்திரங்களின் கதைகளை மாற்றி மாற்றிக் காட்டும் திரைக்கதை யுக்தி சற்றே கவனிக்க வைக்கிறது. ஆனால் தந்தை – மகன் உறவினைச் சொல்லும் சென்ட்டிமெண்ட் காட்சிகள் படத்தோடு நிறைய இடங்களில் ஒட்டாமல் தனியாகத் தெரிகின்றன. மேலும் காட்சிகளின் அதிகமான நீளம், இப்படத்தை சிறுகதை வடிவத்திலிருந்து திரைக்கதையாக மாற்ற “நெறியாள்கையாளர்” தங்கர் பச்சான் சற்று தடுமாறியதை அப்பட்டமாகக் காட்டுகிறது. அதிதி பாலனின் பின்கதையில் வரும் போலீஸ் என்கவுண்டர் காட்சிகள் 80’களின் தமிழ் சினிமாவின் போலீஸ் திருடன் சேசிங் காட்சிகளை  ஞாபகப்படுத்துகின்றன.

கருமேகங்கள் கலைகின்றன: அதிதி பாலன்

அதிலும் குற்றவாளிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு மின்சார ட்ரான்ஸ்பார்மரை எதற்குச் சுட்டார்கள் என்பது இப்போதுவரை பிடிபடவில்லை (தெரிந்தால் கமென்ட் செய்யவும்). மேலும் பக்கத்திலிருக்கும் குற்றவாளிகளை ஓடவிட்டு ஸ்லோமோஷனில் “ஜம்ப் செய்து சுடுவது” எல்லாம் அதிதி பாலனுக்கு இழைக்கப்பட்ட அநீதி. மேலும் என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் மேம்போக்கான சிந்தனையும் அதில் வெளிப்படுகிறது. யதார்த்தம் என்று இதுவரை திரைக்கதையை மெதுவாக நகர்த்திய பிம்பங்கள் எல்லாம் அங்கே உடைந்து போகின்றன. மேலும் யோகி பாபுவுக்கும், அதிதி பாலனுக்கும் பிளாஷ் பேக் காட்சிகளிலிருக்கும் காட்சி வடிவம், கதையின் பிரதான கதாபாத்திரமான பாரதிராஜாவின் பிளாஷ் பேக்-க்கு இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவு.

ஒளிப்பதிவில் ராமேஸ்வரத்தின் வெளிப்புறத்தையும், இடை இடையே வரும் மான்டேஜ் காட்சிகளையும் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம். படத்தொகுப்பாளர் பி.லெனின் காட்சிகளின் நீளத்திற்கு இத்தனை கருணை காட்டியிருக்கத் தேவையில்லை, தொழில்நுட்ப உக்திகளிலும் பழைமை மாறாத்தன்மையே வெளிப்படுகிறது. இருப்பினும் கதை, கதைக்குள் பின்கதை எனச் சிக்கலான திரைக்கதையை அவர் கோர்த்த விதத்தில் அனுபவம் தெரிகிறது. ஜி.வி.பிராகாஷ் இசையில் பாடல்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படத்தவில்லை. பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும் காட்சிகளில் வலுவில்லாததால் ரசிக்க முடியவில்லை.

கருமேகங்கள் கலைகின்றன

ஒட்டுமொத்தமாக சொந்த வளர்ச்சியை மட்டும் தீர்மானித்த ஒரு வயதான நபரின் குற்ற உணர்ச்சியையும், தனிநபரின் இருத்தலியலையும் கேள்வி கேட்பதாகத் திரையில் காட்டப்பட்ட இந்த கருமேகங்கள், எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் திரையை விட்டு கலைந்துவிடுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.