திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் – கிருத்திகா மகன் இன்பநிதி. கால்பந்தாட்ட வீரரான இவர், தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இன்பநிதி தாத்தா செல்லம் என்றும், தங்களிடம் கேட்டு எந்த விஷயமாவது முடியவில்லை எனில் தாத்தாவிடம் கேட்டு அனுமதி வாங்கிவிடுவார் என்று உதயநிதியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இன்பநிதிக்கு அரசியல் புரிதல் இல்லை என்றும், தற்போதைய வயதிற்கான புரிதலோடு அவர் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
என்றாலும் கூட இன்பநிதியை தங்கள் போஸ்டருக்குள் கொண்டு வரும் வேலைகளில் சில நிர்வாகிகள் ஈடுபடுவது அவ்வப்போது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில்தான் புதுக்கோட்டை திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் மணிமாறன், மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமுருகன் ஆகியோர் இன்பநிதிக்கு பாசறையை தொடங்கி போஸ்டர்கள் ஒட்டினர்.
இன்பநிதி பாசறை மாநிலச் செயலாளராக திருமுருகனும், பாசறை ஒருங்கிணைப்பாலராக மணிமாறனைனும் தங்களை அறிவித்துக்கொண்டனர். போஸ்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியோடு இன்பநிதி படம் பெரிதாகவும், “எதிர்காலமே, விண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை, போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை” உள்ளிட்ட வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் இன்பநிதி பிறந்தநாளான செப்டம்பர் 24ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.
திமுக மாநாட்டில் தெறிக்கவிட்ட அன்பில் மகேஷ்..
இந்த போஸ்டர் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், திமுக தலைமை கவனத்திற்கும் இந்த போஸ்டர் விஷயம் சென்றது. இந்த நிலையில் இன்பநிதிக்கு பாசறை அமைத்து போஸ்டர் ஒட்டிய இருவர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த க.செ.மணிமாறன், மு.க.திருமுருகன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே உதயநிதி அரசியலுக்கு வந்ததையே கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சியினருக்கு இன்பநிதி தொடர்பான இந்த போஸ்டர் வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்தது போல ஆகிவிட்டது. எதிர்க்கட்சிகள் இதனை வைத்து வாரிசு அரசியல் என சர்ச்சையை கிளப்பக்கூடாது என்பதற்காகவும், இதுபோன்ற ஆர்வக்கோளாறு விஷயங்கள் இனி நடைபெறக்கூடாது என திமுகவினரை வார்னிங் செய்யும் விதமாகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.