சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தின் மூலம் அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள் என சாடினார்.
யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களை பாஜக அரசு பயந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆளுங்கட்சியாக இருந்த போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்த அதிமுக இப்போது ஆதரவு தெரிவிப்பதாக கூறிய ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுகதான் பலிகடா ஆகும் என்றார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழியை போல், தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே ஸ்டாலினின் பேச்சு காட்டுகிறது என கூறியுள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் என்ற ஜெயக்குமார் நேர விரயம், மனித சக்தி வீணாவதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவுகள் குறையும் என்று கூறிய ஜெயக்குமார், 1982 ஆம் ஆண்டில் இருந்தே ஒரே தேர்தல் கோஷம் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்பதில் திமுகவுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.