ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் நடைபெற உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைக்கப் போவதில்லை என்று நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் தூதர்களை நோபல் அறக்கட்டளை புறக்கணித்திருந்தது. இந்த நிலையில், கடந்த வியாழன் (ஆக.31) அன்று வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.
நோபல் அறக்கட்டளையின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உக்ரைன் மீதான ரஷ்யவின் படையெடுப்பு, ஈரான் அரசின் மனித உரிமை மீறல் மற்றும் பெலாரஸ் அதிபரின் சட்டவிரோத ஆட்சி ஆகியவற்றை கண்டிக்கும் விதமாக இந்த விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் ஸ்டாக்ஹோமில் நடக்க உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.