டெல்லி ஜாமியா நகர், பாட்லா ஹவுஸின் அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து ரத்தம் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை, அந்த வீட்டை சோதனையிட்டதில், அதில் வசித்த 28 வயதான ஆசிரியர் ஒருவர் இறந்துகிடந்தார். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை தொடங்கியது. இந்தக் கொலைக் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, “இறந்துகிடந்த நபர் ஆசிரியாராகப் பணியாற்றி வந்திருக்கிறார்.
தன்பாலின ஈர்ப்பாளரான அந்த ஆசிரியர், தன்னிடம் பாடம் கற்றுக்கொள்ள வந்த 14 வயது சிறுவன் ஒருவனிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியிருக்கிறார். அவனிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர், அதை வீடியோவாகவும் பதிவுசெய்து வைத்துக்கொண்டு, சிறுவனை மிரட்டி வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், கடந்த மாதம் 30-ம் தேதி அந்த ஆசிரியர், சிறுவனை பாலியல் உறவுக்கு அழைத்திருக்கிறார். வராவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் காகித கட்டரை எடுத்துக்கொண்டு, ஆசிரிய வரச்சொன்ன இடத்துக்குச் சென்றிருக்கிறான்.
அங்கு ஆசிரியரின் கழுத்தை அறுத்து அவரைக் கொலைசெய்துவிட்டு, அங்கிருந்து தப்பியிருக்கிறான். கொலைசெய்யப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நேற்று சிறுவன் பிடிக்கப்பட்டிருக்கிறான். விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்” என்று தெரிவித்தார்.