புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், ஜப்பான், சவுதி உட்பட 20 நாடுகளை உள்ளடக்கியதாக ஜி20 அமைப்பு உள்ளது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. இதையடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜி20 அமைப்பின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற பல்துறை மாநாடுகள் நடைபெற்று வந்தன.
ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 7-ம் தேதி டெல்லி வருகிறார். மறுநாள் 8-ம் தேதி பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் 2 நாள் கூட்டத்திலும் அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார். அப்போது, பிரதமர் மோடி தலைமையில் ஜி20 அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளிப்பது குறித்து ஜோ பைடன் பேசுவார் என்று தெரிகிறது. அத்துடன் 2026-ம் ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு, தூய எரிசக்தி, பருவநிலை மாற்றப் பிரச்சினைக்கான தீர்வு, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள சர்வதேச சிக்கல்கள் போன்ற அம்சங்கள் குறித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.