மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் உரிய விலை கிடைக்காததால் செவ்வந்தி, செண்டுமல்லி பூக்களை விற்க கொண்டு வந்த வியாபாரிகள் மூட்டை முட்டையாக குப்பையில் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் தமிழகத்தில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை முக்கியமானது. மதுரை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கூட பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் 100 க்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்படுகின்றன. தினமும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என திருவிழா போல் இந்த சந்தையில் கூட்டம் களைகட்டும். பூக்களை சிறு, குறு வியாபாரிகள் சில்லறையாகவும் மொத்தமாகவும் வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூக்களின் வரத்து அதிகமானதால் செண்டுமல்லி கிலோ 40 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 40 ரூபாய்க்கும் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. தற்போது முகூர்த்த நாள் இருந்தும் கூட செண்டுமல்லி, செவ்வந்திப் பூக்கள், கோழிக்கொண்டை பூக்கள் விலை குறைவாக இருப்பதால் வியாபாரிகளும் விவசாயிகளும் மூட்டை மூட்டையாக குப்பைகளில் கொட்டி செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக செவ்வந்தி மற்றும் செண்டுமல்லி கிலோ 400 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரே நாளில் 40 ரூபாய்க்கு விலை குறைந்ததால் விவசாயிகள் விரக்தியடைந்தனர். இதுபோன்ற நிலையில்லா விலையால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மதுரையில் நறுமனதொழிற்சாலைகளை அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.