நீலகிரி:
பாகிஸ்தானுடன் இந்தியா பகையாக மாறி இருக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு இந்தியா பிரசவம் பார்த்ததாகவும் சீமான் கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரின் பேரில் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று இரவே அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் விஜயலட்சுமி விவகாரம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது திடீரென உலகளாவிய விஷயங்கள் குறித்து சீமான் பேச தொடங்கினார்.
அவர் கூறுகையில், “இந்தியா என்ற பெயர் வெள்ளைக்காரன் வைத்தது. அந்த பெயரை எடுத்து விடுங்கள். அதேபோல, வெள்ளைக்காரன் சூட்டிய இந்து என்ற பெயரையும் எடுத்து விட்டு புதிய பெயர் வையுங்கள். உலகத்தில் எந்த நாட்டுடன் வேண்டுமானாலும் இந்தியா பகை நாடாக மாறியிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான், பங்களாதேஷுடன் பகை நாடாக இருந்திருக்கக் கூடாது. பாகிஸ்தான் இந்தியாவின் மகன் என்றால், பங்களாதேஷ் பேரன் போன்றது. பங்களாதேஷ் பிறக்கும் போது பாகிஸ்தான் தாய்க்கு பிரசவம் பார்த்த தாய் இந்தியா” என்று சீமான் பேசினார்.
சீமானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மேலும், சீமான் இவ்வாறு பேசியதை ஒரு திரைப்படத்தில் மிர்ச்சி சிவா பேசும் வசனத்தை போன்று இருப்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர். ‘தமிழ்படம் 2’ திரைப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதியிடம் பேசும் மிர்ச்சி சிவா, “இந்தியா உன் எதிரி இல்ல. இந்தியா உன் பெரியம்மா டா. நீ இந்தியாவ எதிரியாக பாக்குற. நான் பாகிஸ்தான் என் அம்மா கூடப்பொறந்த தங்கச்சியா பாக்குறேன். பிரியாணி நம்ம ஃபேமிலி சாப்பாடு டா. நீ என் சித்தி பையன் டா” என பேசுவார்.
இந்நிலையில், மிர்ச்சி சிவா பேசும் வீடியோவையும், சீமான் பேசும் வீடியோவையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.