கோவில்பட்டி: எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால், எட்டயபுரம் பேரூராட்சி பகுதி மக்கள் டேங்கர் மூலம் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களை நம்பியே உள்ளனர். எனவே, எட்டயபுரம் பேரூராட்சிக்கு என தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.ரவீந்திரன் கூறியதாவது: எட்டயபுரம் பேரூராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 1974-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த திமுக தலைமையிலான அரசு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் அப்போதிருந்த மக்கள் தொகைக்கு சரியாக இருந்தது.
ஆனால், காலப்போக்கில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்கவே விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு போதுமானதாக இல்லை. இதையடுத்து கடந்த 2002-ம் ஆண்டு கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம், சாத்தூர் ஆகிய ஊர்களை இணைத்து புதிதாக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு 2004-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.
இதன் மூலம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால், அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை முழுமையாக 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படவில்லை. குழாய்களில் அடிக்கடி ஆங்காங்கே உடைப்பு ஏற்படுவதால் சராசிரியாக 3 முதல் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தான் வழங்கப்படுகிறது. சீராக குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
இதற்கிடையே, குடிநீர் வடிகால் வாரியத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம். ஊருக்குள் உள்ள நிலத்தடிநீரை பயன்படுத்துங்கள் என மாவட்ட நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியமும் அறிவுறுத்தியது. அதனை செயல்படுத்தும் விதமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வெளியே பிதப்புரம் செல்லும் சாலையில் உள்ள பாண்டியன் கண்மாயில் 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது.
அதிலிருந்து தண்ணீர் எடுத்து, சீவலப்பேரி குடிநீருடன் கலந்து விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், அந்த தண்ணீர் குடிக்க உகந்ததாக இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி தண்ணீரை தனித்தனியாக ஆய்வுக்கு அனுப்பியதில், 2 கிணறுகளை சேர்ந்த குடிநீரை அருந்தினால் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் சீவலப்பேரி குடிநீர் மட்டும் 20 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் டேங்கர்கள் வாகனங்கள் சுமார் 10 வரை எட்டயபுரம் நகரில் வலம் வருகின்றன. இந்த வாகனங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது. அதனை எவ்வாறு சுத்திகரிக் கின்றனர் என்பதை பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை.
சமீபகாலமாக எட்டயபுரம் நகரில் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே, எட்டயபுரம் நகருக்கென தனியாக குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு நிதி ஒதுக்கி துரிதமாக பணிகளை மேற்கொண்டு, மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறினார்.