மேட்டூர்: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அரசு நியமித்துள்ள குழு, பரிந்துரையை பதிவு செய்த பிறகு, பாமகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மற்றும் வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திக், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் பணிகளை 6 மாதத்திற்கு முன்பே துவங்கி விட்டோம். மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை ஆத்தூர் தலைவாசல் வரை கொண்டு செல்ல வேண்டும். காலநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால் வரும் காலம் சோதனை காலமாக வரப்போகிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருக்கும். எனவே நீர் வரும்போது நீரை சேமிக்க வேண்டும்.
சேலத்தில் உள் மற்றும் வெளி வட்ட ரிங் ரோடு அமைக்க வேண்டும். சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க கூடாது. இரும்பாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அந்த நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால், தமிழக அரசு மாற்று திட்டத்தை கொண்டு வர வேண்டும். கர்நாடகாவிடம் தண்ணீருக்காக தமிழக அரசு பிச்சை எடுத்து வருகிறது. கொள்ளிடத்தில் 10 தடுப்பணைகளை கட்ட வேண்டும். ஆனால், தமிழக அரசு 10 மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
கொள்ளிடம் விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும்.
தமிழகத்துக்கு என்எல்சி தேவை இல்லை. தமிழகத்தில் இருந்து என்எல்சியை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், என்எல்சிக்கு தமிழ்நாடு அரசு அடிமையாக உள்ளது. பசுமை எரிசக்தி போன்ற திட்டங்களை உலக நாடுகள் முன்னெடுத்து வந்துள்ளன. சூரிய சக்தி, காற்றாலை, நீர் மூலமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கூடுதல் கவனம் செலுத்தாமல், விவசாயத்தை அழித்து மின் உற்பத்தி செய்ய வேண்டாம். தமிழகத்தில் ஆவின் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அரசு நியமித்துள்ள குழு, பரிந்துரையை பதிவு செய்த பிறகு, பாமகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தலில் வந்தால, வாக்கு இயந்திரம் பற்றாக்குறை ஏற்படும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, விரைவில் அறிவிக்கப்படும். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும், இது எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் வியூகம் வகுக்கப்படும். விவசாயிகள் பிரச்சனைகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. தரமான மருத்துவர்களை நீட் தேர்வு உருவாக்கவில்லை, வணிக கல்வி முறையையே இது ஊக்குவிக்கிறது. கொள்முதல் ஆதார விலை குவிண்டாலுக்கு கடந்த முறை ரூ.100 உயர்த்த நிலையில், தற்போது, ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, நெல் கொள்முதல் விலையை ரூ.500 ஆக உயர்த்த வேண்டும். பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது பதியப்பட்டுள்ள வரதட்சணை புகார் குறித்து வழக்கு விசாரணை முடிந்த பிறகு கட்சி சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை மாற்ற வேண்டும். பல்கலைக்கழக கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கு பதில் கல்யாண மண்டபம் நடத்தி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.