சென்னை:
சனாதனம் பற்றி தான் பேசியது அனைத்தும் சரியானது தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு தமிழக பாஜகவினர் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தான் பேசியதில் எந்த தவறும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது. அதை ஒழிக்கத்தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை எல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒரேயடியாக ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜகவினர் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், உதயநிதி மீது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரும் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதுகுறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சனாதனம் பற்றி நான் பேசிய விஷயங்களை இந்தியா முழுவதும் இன்றைக்கு பேசி வருகிறார்கள். பேச வேண்டும் என்பதற்காகவே அப்படி நான் பேசினேன். சனதானக் கோட்பாடுகளை தான் ஒழிக்க வேண்டும் என்று நான் கூறினேன். அப்படித்தான் நான் பேசுவேன்.
நான் பேசியதை பைத்தியக்காரத்தனமாக சிலர் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, நான் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பேசியது போல அவர்கள் திரித்து வருகிறார்கள். இப்போது திமுகவை ஒழிக்க வேண்டும்.. கம்யூனிசத்தை ஒழிக்க வேண்டும் என பாஜக பேசுகிறது. அப்படியென்றால் திமுக காரர்களை கொலை செய்ய வேண்டும் என அர்த்தமா என்ன? இப்படி திரிப்பதும், பொய் செய்தியை பரப்புவது பாஜகவுக்கு வாடிக்கையானது தான்.
சனாதனம் என்றால் என்ன.. எதுவுமே மாறக்கூடாது. எல்லாமே நிலையானது என சொல்வதுதான் சனாதனம். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்; எப்போதுமே ஒரே மாதிரியே இருக்கக் கூடாது என்று சொல்வது தான் திராவிட மாடல். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பததான் திராவிட மாடல். அதனால் நான் சனாதனம் பற்றி பேசியது சரியானது தான். எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சந்திப்பேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.