மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெண்ணிய கல்வி மையம், ரூசா திட்டம் சார்பில், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தென்மண்டல அமலாக்கத்துறை எஸ்பி சுஜித்குமார் பங்கேற்று பேசியதாவது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆணாதிக்க மனநிலையே காரணம் என, கூறலாம். பெண்கள் வளர்ச்சியை ஆண்கள் பெரும்பாலும் ஏற்பதில்லை. பெண்களை சமத்துவ மனபான்மையோடு அணுகினால் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கலாம்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் எந்த வகையிலும் ஏற்படலாம். ஒரு வினாடிக்கு ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதாக புள்ளிவிவர கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதற்கேற்ப புகார்கள் வருவதில்லை. புகார்கள் அதிகரிக்க வேண்டும். பாலியல் குற்றங்களை தடுக்க, பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம் தேவை, என்றார்.
கருத்தரங்கில் சிண்டிகேட் உறுப்பினர் நாகரத்தினம், பெண்ணியல் கல்வி மைய இயக்குநர் ராதிகா தேவி உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.