அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை நோக்கி குடிநீர் பாட்டில்களும் வீசப்பட்டன. இந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கால் மற்றொரு பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டது.
அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அதன்பிறகு நடந்த உட்கட்சித் தேர்தலில் வென்று பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் அனைத்திலும் எதிர்மறையான தீர்ப்பே வந்துள்ளன.
இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் ஆலோசித்து வருகிறார். முன்னதாக கட்சி கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஓபிஸ் தலைமையில் இன்று மிகப்பெரிய மாநாடு நடைபெறுகிறது. அதில், அதிமுக கொடி மற்றும் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதனை ஓபிஎஸ் தரப்பு பொருட்படுத்தவில்லை.
கோடநாடு விவகாரத்தில் எடப்பாடியை ஸ்டாலின் காப்பாற்றுவது ஏன்? – புகழேந்தி கேள்வி
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவோடு, தமிழக மக்களின் ஆதரவோடு நீதியையும் தர்மத்தையும் நிலைநாட்டுவதற்காக எங்களின் புரட்சிப் பயணம் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்குகிறது” என்று தெரிவித்தார். மேலும், அதிமுக கொடியை பயன்படுத்துவது பற்றிய கேள்விக்கு, “கொடியை பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடினால்தான் வெற்றிபெற முடியும் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். அரசியல் தலைவர்களுடனான எனது சந்திப்பு தொடரும் என்றார். புதிய கட்சித் தொடங்கும் எண்ணம் எதுவும் உள்ளதாக என்ற கேள்விக்கு, “புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இருந்தால் அதனை முதலில் பத்திரிகையாளர்களிடம்தான் சொல்வேன்” என்று கூறினார்.