புதுடெல்லி: தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைத்து நிர்வகிப்பதற்கென்று மத்திய அரசு ‘யு-வின்” (U-WIN) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. விரைவிலேயே இத்தளம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கரோனா தடுப்பூசி தொடர்பான விவரங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய அரசு ‘கோ-வின்’ (CO-WIN) தளத்தை உருவாக்கியது. இதன் அடிப்படையில், ஏனைய தடுப்பூசி விவரங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க ‘யு-வின்’ தளத்தை தற்போது உருவாக்கியுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரம்பு, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள், இனி செலுத்த வேண்டிய தடுப்பூசி விவரங்கள் உள்ளிட்டவை ‘யு-வின்’ தளத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
குறிப்பாக, கருவுற்றிருக்கும் பெண்கள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகள், குழந்தை பிறப்பு, அதன் பிறகு குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி விவரங்கள் அனைத்தும் இந்த ஒரு தளத்திலிருந்து நிர்வகிக்கப்படும்.
தற்போது, தடுப்பூசி விவரங்கள் கைப்பட எழுதப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இதனால், தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், ‘யு-வின்’ தளம் மூலம் தடுப்பூசி விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன.