பெங்களூரு, சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள, ‘ஆதித்யா- எல்1’ விண்கலம் வெற்றிகரமாக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த, ‘ஆதித்யா- எல்1’ விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., -சி57 ராக்கெட் வாயிலாக நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மொத்தம், 125 நாட்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்ற பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், ஆதித்யா -எல்1 விண்கலத்தின் நிலை குறித்து இஸ்ரோ நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:
ஆதித்யா- எல்1 விண்கலம் வெற்றிகரமாக செயல்படுகிறது. ஆதித்யா -எல்1 விண்கலம் பூமியைச் சுற்றிச் செல்லும் முதல் சுழற்சி, பெங்களூரில் உள்ள, ‘இஸ்டிராக்’ எனப்படும் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
விண்கலம் பூமியை, 245 கி.மீ.,க்கு 22,459 கி.மீ., ஆக சுற்றி வருகிறது. அடுத்த சுழற்சி, நாளை மாலை 3:00 மணிக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement