புதுடெல்லி: இந்தியா வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, வளர்ந்த நாடாக இருக்கும். அப்போது ஊழல், சாதி,மதவாதம் போன்ற தீயசக்திகளுக்கு இடம் இருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்கில் வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஜி20 மாநாடு, தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறை.
தலைவர்கள் பங்கேற்பு: இந்த மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேசி உட்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியிடம் பிடிஐ செய்தி நிறுவனம் நேற்று சிறப்பு நேர்காணல் நடத்தியது. அதில் பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவின் தொலைநோக்கு மற்றும் வார்த்தைகளை உலக நாடுகள் வெறும் கருத்துகளாக மட்டும் பார்ப்பது இல்லை எதிர்காலத்துக்கான வழிகாட்டுதலாகவே பார்க்கின்றன. உலக நாடுகளின் பொருளாதார மைய பார்வை, மக்கள் மைய பார்வையாக மாறி வருகிறது.இந்த மாற்றத்தில் இந்தியா வினையூக்கியாக செயல்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக, இந்தியா பசியால் வாடும் மக்கள் நிறைந்த நாடாக பார்க்கப்பட்டது. தற்போது உயர்ந்த லட்சியம் மற்றும் திறமையானவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும் நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் அதிக மக்கள் தொகையால் அடுத்த சில ஆண்டுகளுக்கு சிறந்த பலன் கிடைக்கும். வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கும் சிறந்த வாய்ப்பு இன்றைய இந்தியர்களுக்கு உள்ளது.
ஒரு காலத்தில் இந்தியா மிகபெரிய சந்தையாக பார்க்கப்பட்டது. தற்போது உலகத்தின் சவால்களுக்கு தீர்வு காணும் நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இலவச கலாச்சாரத்தை எதிர்க்கட்சிகள் ஊக்குவிக்கின்றன. இதுபோன்ற பொறுப்பற்ற நிதி கொள்கைகள் குறுகிய கால அரசியல் பலனை தரலாம். ஆனால், நீண்டகாலத்துக்கு மிக பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்.
வரும் 2047-ம் ஆண்டில் 100-வதுசுதந்திர தினத்தை கொண்டாடும்போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். அப்போது ஊழல், சாதி,மதவாதம் உள்ளிட்ட தீயசக்திகளுக்கு கட்டாயம் இடம் இருக்காது.
சர்வதேச கூட்டங்களை டெல்லிக்கு வெளியே நடத்தும் அளவுக்கு, இதர மாநில மக்கள் மீதுமுந்தைய அரசுகளுக்கு நம்பிக்கைஇருந்ததில்லை. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது நாட்டில் நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறது.
மிகவும் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாபின்பற்றும் அணுகுமுறை, உலக அளவில் வழிகாட்டுகிறது. இந்தியா தலைமை வகிக்கும் ஜி20 மாநாட்டின் கருப்பொருளான ‘வசுதைவ குடும்பகம்’ என்பது வெறும் கோஷம் அல்ல. நமது கலாச்சார நெறிமுறைகளில் இருந்து பெறப்பட்ட பரந்த தத்துவம் ஆகும்.
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தூதரக அளவிலான பேச்சுவார்த்தைதான் ஒரேவழி. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றாலும், இல்லாவிட்டாலும், உலக அமைதிக்கான ஒவ்வொரு முயற்சிக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
சீனா, பாகிஸ்தானின் கருத்தை நிராகரித்த பிரதமர்: அருணாச்சலப் பிரதேசத்தில் ஜி20 தொடர்பான கூட்டங்கள் கடந்த மார்ச்சில் நடத்தப்பட்டன. இதில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அதபோல காஷ்மீரின் ஸ்ரீநகரில் சுற்றுலா தொடர்பான ஜி20 கூட்டம் கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இங்கு கூட்டங்கள் நடத்தியதற்கு ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள சீனாவும், உறுப்பினர் அல்லாத பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்தன. சீனா, பாகிஸ்தானின் கருத்துகளை நிராகரித்த பிரதமர் மோடி, ‘‘இந்த தேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில்தான் ஜி20 கூட்டங்களை இந்தியா நடத்துகிறது. இது இயல்பானதே’’ என்றார்.