சென்னை: அதிபர் முறையை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ‘ஒரேநாடு, ஒரே தேர்தல்’ என்ற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது. இது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: யார் பிரதமராக வர வேண்டும், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது அல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம் லட்சியமாக, நோக்கமாக இருக்கவேண்டும். ‘இண்டியா’ என்றாலே பலருக்கு பயம் ஆகிவிட்டது. இண்டியா என்ற பெயரை சொல்வதற்கே கூச்சமும், அச்சமும் படுகின்றனர்.
பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை பாட்னாவில் திரட்டினார் நிதிஷ்குமார். அங்கு கூட்டம் நடத்தி, அதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்தோம்.
பிறகு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2-வது முறையாக கூடி,கூட்டணிக்கு ‘இண்டியா‘ என்ற பெயரை அறிவித்தோம். பின்னர், மும்பையில் 3-வது கூட்டத்தை நடத்தி, நமது கூட்டணி செயல்படுவதற்கு என்னென்ன அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும், தேர்தல் களத்தில் எப்படி ஈடுபட வேண்டும், பிரச்சாரத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்காக சில குழுக்களையும் அமைத்துள்ளோம்.
இவற்றை பார்த்து அஞ்சி நடுங்கி, திடீரென நாடாளுமன்றத்தை கூட்டப் போகிறோம் என அறிவித்துள்ளனர். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்‘ என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான சில முயற்சிகளுக்காக நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளனர்.
அந்த குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர்தான் தலைவர். நாட்டின் முதல் தலைமகனாக குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்தவரை தலைவராக நியமித்துள்ளனர். குடியரசுத் தலைவர் என்பவர் பொதுவானவர். பதவியில் இருந்து விலகினாலும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது. அரசியல் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையிலும் அவர் தலையிட கூடாது. அதுதான் நியாயம், அதுதான் மரபு.
திமுக பிரதிநிதிகள் இல்லை: ஆனால், அதை எல்லாம் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் சொல்வதைஅவர் கேட்பார் என்பதற்காகஅவரையும், சில உறுப்பினர்களையும் நியமித்துள்ளனர். அந்த உறுப்பினர்களையும்கூட, எல்லா கட்சிகளையும் கேட்டு நியமிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், அந்த குழுவில் திமுக பிரதிநிதிகள் இல்லை.
தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலரை நியமித்து, அவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும்என்பதற்காக ஒரு சதி திட்டத்துக்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, ஆளுங்கட்சியாக இருந்தபோது அந்த கொள்கையை எதிர்த்தது. இப்போது, அதிமுக ஆதரிக்கிறது. அதிமுக பலிகடா ஆகப்போகிறது.
இந்த சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
ஆட்சியை கலைப்பீர்களா? கடந்த 2021-ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று, திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால், இந்த ஆட்சியை கலைத்து விடுவீர்களா. கேரளா, மேற்கு வங்கத்திலும் கலைத்துவிடுவீர்களா. அவர்களுக்கெல்லாம் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி இருக்கிறது. கர்நாடகாவில் தற்போது அமைந்துள்ள காங்கிரஸ் ஆட்சியையும் கலைப்பீர்களா.
இவ்வாறு தேர்தல் நடத்தி, எங்காவது ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி வராமல் போய், ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்.மறுபடி அடுத்த மக்களவை தேர்தல் வரும்வரை அந்த தேர்தலை நடத்தாமல், குடியரசுத் தலைவர் ஆட்சி நடத்தப்படுமா.
தான் ஒரு அதிபராக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டை பற்றி கவலைப்படவில்லை. இது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம்.
தேர்தல் செலவை குறைக்க வேண்டும் என்று காரணம் கூறுகின்றனர். தேர்தல் செலவை குறைப்பதைவிட, கொள்ளை அடிப்பதை முதலில் குறையுங்கள்.
நெடுஞ்சாலை போட்டதில், டோல்கேட் வசூலில் – இப்படி பல நிலைகளில் ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்ததை சிஏஜி அறிக்கை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.
அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார். இப்படிப்பட்டகொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதற்கு ‘இந்தியாவை காப்பாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும்’ என சபதம் ஏற்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.