தமுஎகச சார்பில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது உதயநிதி, “சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் ஒழிப்பு மாநாடு என போட்டதற்கு எனது வாழ்த்துகள். டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அதுபோலவே சனாதனத்தையும் எதிர்க்காமல் ஒழித்துத் கட்ட வேண்டும். சனாதனம் என்பது சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.” என்று பேசினார்.
அமைச்சரின் பேசிய சில மணி நேரங்களில் அது தேசிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்து விவாதப் பொருளாக மாறியது. சனாதன தர்மம் தொடர்பான உதயநிதியின் பேச்சை கையிலெடுத்துள்ளது பாஜக. உதயநிதியை எதிர்த்து பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்கள் கூட உதயநிதி பேசியது தவறு என்று கருத்துக்களை முன்வைத்துள்ளனர். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், எந்த சட்ட நடவடிக்கைக்கும் தான் தயார் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதன் உச்சக்கட்டமாக உள் துறை அமைச்சரான அமித் ஷாவும் உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த இரண்டு நாட்களாக இந்திய கூட்டணி சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றனர். நமது சனாதன தர்மத்தை அவர்கள் அவமதிப்பது இது முதல்முறையல்ல.மோடி ஜெயித்தால் சனாதனம் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. லஷ்கர்-இ-தொய்பாவை விட இந்து அமைப்புகள் ஆபத்தானவை என்றார் ராகுல்” என விமர்சித்துள்ளார்.
இதுபோலவே பாஜக தேசியத் தலைவர் நட்டா, “சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். டெங்கு, மலேரியா போல், ‘சனாதன தர்மமும்’ ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார். இதுகுறித்து பேசுவதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. உதயநிதியின் பேச்சு என்பது இந்திய கூட்டணி அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியா? வரும் தேர்தலில் இந்து விரோத உத்தியைத்தான் பயன்படுத்தப் போகிறீர்களா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.