புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மும்பையில் கடந்த ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (76) பங்கேற்றார். இந்நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறும்போது, “சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை இப்போது சீராக உள்ளது” என்றார்.
கடந்த ஜன.12-ம் தேதி சுவாசதொற்று காரணமாக கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு 17-ம் தேதி வீடு திரும்பினார். பிறகு, கடந்த மார்ச் 2-ம் தேதி லேசான காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.