சென்னை: சூரியனை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல்-1 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்க வளாகத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விஞ்ஞானி ராஜகுரு, மாணவர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை, மிகவும் குறைந்த செலவில் விண்கலங்களை ஏவி வருகிறோம். ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திதான் விண்கலன்கள் இலக்கை நோக்கிஏவப்படுகின்றன. விண்வெளியில் பல்வேறு கதிர்வீச்சுகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். அவற்றாலும், விண்வெளியில் ஏற்படும்காலநிலை மாறுபாடுகளால் செயற்கைக்கோளில் உள்ள கருவிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் தங்க நிறத்திலான திரை போன்ற பொருள், விண்கலத்தைச் சுற்றி அமைக்கப்படுகிறது.
சூரிய புயல்கள்: ஆதித்யா விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். அங்குள்ள அதிக வெப்பம் விண்கலத்தைப் பாதிக்காத வகையில், பல்வேறு உலோகக் கலவைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. சூரிய புயல்களை முன்னரே கண்டறிய முடிந்தால், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான இது போன்ற நிகழ்ச்சிகளால், மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களை ஊக்கப்படுத்தினால், அவர்கள் சிறந்த விஞ்ஞானியாக உருவாகவும் வாய்ப்புள்ளது” என்றார்.