சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 2.19 லட்சம் இடங்களுக்கு, பி.இ., – பி.டெக்., மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், 1.60 லட்சம் இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
இந்த கவுன்சிலிங், ஜூலை 22ல் துவங்கியது. மூன்று சுற்று கவுன்சிலிங் நேற்றுடன் முடிந்தது.
இதில், அரசு பள்ளி மாணவர் பிரிவில், 11,058 பேர்; மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவுகளில், 95,046 பேர் என, மொத்தம், ஒரு லட்சத்து, 6,104 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து, 60,780 இடங்களில், 54,676 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலியிடங்களுக்கு, 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று மாலையுடன் முடிந்தது.
இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட, 12,533 பேர் அதிகமாக ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், பெரும்பாலான மாணவர்கள், கணினி அறிவியல், ஐ.டி., ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், இ.சி.இ., போன்ற படிப்புகளை தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவை, குறைந்த மாணவர்களே தேர்வு செய்துள்ளனர்.
மொத்தம், 12 கல்லுாரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 68 கல்லுாரிகளில், 95 சதவீதத்துக்கு அதிகமான இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 11 கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இவ்வாறு கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்