இம்பால்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நெக்டர் சன்ஜென்பாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மியான்மருக்குள் சென்று நாகா தீவிரவாதிகளை அழிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி மற்றும் நாகா சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த மே 3-ம் தேதி மணிப்பூரில் மைத்தேயி, குகி சமுதாயத்தினருக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக நீடிக்கும் கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். ஏராளமான மைத்தேயி இன மக்கள் அசாம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் சென்றனர்.
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில காவல் துறையில்பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. வெளிமாநிலங்களில் இருந்து புதிய காவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனா லும் இதுவரை கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கண்காணிப்பாளராக… இந்த சூழலில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கர்னல் நெக்டர் சன்ஜென்பாம் மணிப்பூர் காவல் துறையில் சிறப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
யார் இவர்? கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி மணிப்பூரின் சண்டல் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்களை குறிவைத்து நாகா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நாகா தீவிரவாதிகள் அண்டை நாடானமியான்மருக்கு தப்பி ஓடி விட்டனர்.
ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தின் சிறப்பு படைப் பிரிவை சேர்ந்த 70 வீரர் கள் கடந்த 2015-ம் ஆண்டு 9-ம் தேதி மியான்மருக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 38 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துல்லிய தாக்குதலை (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) ராணுவ கர்னல் நெக்சல் சன்ஜென்பாம் தலைமையேற்று நடத்தினார். இதற்காக அவருக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சவுரிய சக்ரா விருதினையும் அவர் பெற்றுள்ளார்.
5 ஆண்டு பணி: வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத முகாம்களை அழிப்பதில் வல்லவர் என்று போற்றப்படும் நெக்சல் சன்ஜென்பாமிடம் மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவர் மணிப்பூர் காவல் துறை யின் எஸ்எஸ்பி ஆக 5 ஆண்டுகள் பணியாற்றுவார் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது.