சிவகாசி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு முன்பு எதிர்ப்புத் தெரிவித்த பழனிசாமி, தற்போது ஆதரவு தெரிவிப்பதன் மூலம் உறுதியான முடிவு எடுக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை என்பதைக் காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
சிவகாசியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: ‘இண்டியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர ஆர்வம் காட்டி வருகின்றன. பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத் துடன் ‘இண்டியா’ கூட்டணி உருவாகி உள்ளது. இதைக் கண்டு பதற்றம் அடைந்துள்ள பாஜக, மக்களைத் திசை திருப்புவதற்காக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற யோசனையை முன் வைத்துள்ளது.
இதுவரை குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு எந்தப் பதவியும், பொறுப்பும் வழங்கியது கிடையாது. ராம்நாத் கோவிந்த் நேர்மையான மனிதர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மோடி வழங்கிய ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக் குழு தலைவர் பொறுப்பை அவர் ஏற்று இருக்கக் கூடாது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்பு எதிர்ப்புத் தெரிவித்தார். தற்போது அவர் ஆதரவு தெரிவிப் பதன் மூலம் உறுதியான முடிவு எடுக்கக்கூடிய நிலையில் பழனிசாமி தற்போது இல்லை. அவருக்கு ஏதோ நெருக்கடி இருப்பது என்பதைத்தான் இந்த முடிவு காட்டுகிறது இவ்வாறு அவர் கூறினார்.