வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி, அதனை வெற்றிகரமாக தரையிறங்கி இஸ்ரோ சோதனை செய்துள்ளது.
நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. நிலவின் தென்துருவத்தில், விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதற்குள் இருந்த பிரஜ்ஞான் ரோவர் சாதனம், நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் கந்தகம், பிளாஸ்மா ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.
ரோவர் தற்போது நிலவில் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரஜ்ஞான் ரோவர் தனது ஆய்வு பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், செப்.,22ம் தேதி நிலவில் மீண்டும் சூரியன் உதயமாகும் போது ரோவர் அடுத்தக்கட்டப் பணிகளுக்கு மீண்டும் ஸ்விட்ச் ஆன் ஆகும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி, அதனை வெற்றிகரமாக தரையிறங்கி இஸ்ரோ சோதனை செய்துள்ளது. இது குறித்து இஸ்ரோ கூறியிருப்பதாவது: விக்ரம் லேண்டர் மீண்டும் நிலவின் மீது மெதுவாக தரையிறங்கியுள்ளது. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக மேலெழும்பும் சோதனைக்கு உட்பட்டது. எங்கள் கட்டளையின் பேரில், லேண்டர் அதன் இயந்திரங்களைச் செயல்படச்செய்து, எதிர்பார்த்தபடி சுமார் 40 செமீ உயர்த்திற்கு மேலே தூக்கி, 30 – 40 செமீ தொலைவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதற்கான முக்கியத்துவம் என்னவென்றால், இந்த ‘கிக்-ஸ்டார்ட்’ வருங்காலத்தில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் திட்டத்துக்கு முன்மாதிரியாக இருக்கும். அனைத்து அமைப்புகளும் சரியாக செயல்படுகின்றன மற்றும் ஆரோக்கியமாக உள்ளன. லேண்டரில் உள்ள ராம்ப், ChaSTE மற்றும் ILSA ஆகிய ஆய்வு கருவிகள் தரையிறங்கிய பின்னர் மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement