தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சனிக்கிழமை சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனா போல் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் உதயநிதி சனாதனத்தை பின்பற்றுபவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பேசியதாக பொய் பிரச்சாரத்தை வட மாநிலங்களில் சிலர் பரப்பினர். பாஜகவும் இதை தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
சனாதன கொளை பற்றி அறியாதவர்களே அதை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றனர். சனாதன ஒழிப்பை காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆதரிக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி.
முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழ்நாடு இல்லத்தில் முதன்மை ஆணையரிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் அளித்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையில் நான்கு பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளார்.
இந்தியா கூட்டணி பாஜகவில் பயப்பட வைத்துள்ளது – உதயநிதி
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு திரித்துப் பரப்பபடும் நிலையில் தேசிய அளவில் இந்தியா கூட்டணிக்கு நெருக்கடி உருவாகிறது. சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் சிவசேனா, சனாதனத்தை எதிர்க்காத காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிலிருந்து திமுகவை அந்நியப்படுத்தும் பணிகளும் ஒரு பக்கம் நடக்கின்றன.
அரசியல் ரீதியாக இப்படி என்றால், உதயநிதியை இந்த விவகாரத்தில் கைது செய்யலாமா என்றும் டெல்லியில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. ஒருவேளை கைது செய்தால் அது உதயநிதியின் அரசியல் கிராஃபை உயர்த்திவிடுமோ என்றும் யோசிக்கிறார்களாம். அதனால் வேறு ஏதேனும் வழக்கில் அவரை வளைக்கலாமா என்றும் தீவிரமாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.
உதயநிதியின் பேச்சும் அவர் அதில் காட்டும் உறுதியும் தமிழ்நாட்டில் நிச்சயம் அவருக்கு பெரியளவில் ஆதரவைப் பெற்றுத்தரும். ஆனால் இந்தியா கூட்டணியில் இது சலசலப்பை உருவாக்கும். பாஜகவுக்கு எதிராக பேசிவந்த இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தற்போது சனாதனம் குறித்த தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். இதனால் அரசியல் அரங்கில் சமீபகாலமாக அடித்து ஆடிவந்த இந்தியா கூட்டணி தற்போது தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.