திருவனந்தபுரம், ”கேரளாவில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கலை மையத்திற்கு, ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். நான் இறந்த பின்னும், இந்த நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும்,” என, வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரும், ‘லுலு’ குழும தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.ஏ.யூசுப் அலி, 67, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பெரும் தொழிலதிபராக உள்ளார். பிரபல லுலு குழுமத்தின் தலைவராக உள்ள இவர், மத்திய அரசின், ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மாற்றுத்திறனாளி கலை மையத்திற்கான லோகோ அறிமுக விழா நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலி பேசியதாவது:
கேரள அரசின் புள்ளி விபரங்களின்படி, மாநிலத்தில், எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர். இவர்கள், நல்ல கல்வியைப் பெறுவதை உறுதி செய்வது எங்கள் சமூகக் கடமை.
இதை நிறைவேற்றும் வகையில், இந்த கலை மையத்திற்கு, 1.5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான காசோலையை, கலை மையத்தின் இயக்குனரிடம் வழங்குகிறேன்.
மேலும், இனி ஒவ்வொரு ஆண்டும், இந்த கலை மையத்திற்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். நான் இறந்த பின்னும் இது தொடரும். இதை என் குழுவினர் செயல்படுத்துவர். ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்தில், இந்த கலை மையத்துக்கு இந்தத் தொகை வந்தடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலியின் இந்த அறிவிப்புக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்