`ஆடுகளம்’ படப்பிடிப்பின் முதல் 20 நாட்கள் முடிந்திருந்த நேரம். முதல் காட்சியில் நடக்கும் போலீஸ் ரைடுக்கு பிறகு வரும் பஞ்சாயத்து சீன் ஷூட் செய்து முடிக்கப்பட்டிருந்தது. எடுத்தவற்றை பார்க்கலாம் என்று கையிலிருந்த 29 நிமிட பஞ்சாயத்து சீன் உட்பட 45 நிமிட ஃபுட்டேஜ் எடிட் டேபிளுக்கு அனுப்பப்பட்டது. பொல்லாதவனில் அசோஸியேட் எடிட்டராகப் பணிபுரிந்த கிஷோரே ஆடுகளத்தின் எடிட்டர்.
ரஃப் கட்டும் தயாரானது. ஆனால் அதை பார்க்கத் தொடங்கிய படக்குழுவினருள் ஒவ்வொருவராய் அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டனர். கடைசியில் அங்கு மீதமிருந்த ஒருவர் வெற்றிமாறன் மட்டுமே. “ ‘பொல்லாதவன்’ மூலமா கிடைச்ச அங்கீகாரத்தை வச்சி என்னைக்காவது ஒரு நல்ல சினிமா எடுத்திடமாட்டோமா” என்று நினைத்திருந்த அவருக்கே கூட தன் அடுத்த படத்தின் இத்தனை நிமிட காட்சிகளில் ஒன்றுடன்கூட ஒன்றிப் போக முடியவில்லை. அந்த நொடி தன் வாழ்க்கையே கையைவிட்டு போவது போல உணர்ந்ததாக அவரே கூட கூறியிருக்கிறார்.
தன் கலைப்படைப்பின் மீதான முழுமையான கட்டுப்பாடு என்பது எந்த ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய ஓர் அடிப்படை குணம். ‘Control over the Craft’ என்று கூறுவார்களே, கற்பனையாக தோன்றும் தன் படைப்பிற்கான முதல் உந்துதலில் தொடங்கி கலைவடிவமாக அது முழுமையாகும் வரை ( முழுமை என்று கூறுவது சரியா என்பது தெரியவில்லை), சரி… அப்படைப்பு மக்களிடம் சென்றுசேரும் வரையிலான இடைப்பட்ட காலத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்படும் தொழில்நுட்பம் தொடங்கி, நம் கட்டுப்பாட்டில் கொஞ்சமும் இருக்காத இயற்கைவரை அனைத்தையும் சமாளித்து வெளிவரும் அவுட்-புட்டின் மீது அப்படைப்பாளிக்கு கட்டுப்பாடு இருத்தல் அவசியம். இந்த அடிப்படை குணத்தை அடைவதுதான் இருப்பதிலேயே கடினமான ஒன்று.
காரணம், கலை என்பது புறத்தில் பெற்று நம் அகத்தை நிரப்புக்கொள்ளும் ஒன்றல்ல. நுணுக்கங்களை எந்த எல்லைவரையிலும் சென்று கற்றுக்கொள்ளலாம். ஆனால் கலைக்கான சிறிய ஊற்று நம்முள் கொஞ்சமேனும் இருத்தல் வேண்டும். விடாப்பிடியாய் அதை பற்றியிருப்பதற்கான வாய்ப்பு இங்கு யாருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி செய்யலாம், ஆனால் வெகுவிரைவில் அது உங்களை தூர தூக்கி எறிந்துவிடும்!
இப்படியிருக்க, முதல் ஷெட்யூலின் முடிவில் செய்வதறியாது உட்கார்ந்திருந்த வெற்றிமாறனுக்குத்தான் அதே ‘ஆடுகளம்’ சிறந்த திரைக்கதை மற்றும் இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. தன் படைப்புமீது அவருக்கிருந்த பார்வையும் அதன் மீதான கன்ட்ரோலுமே இதற்கு காரணம். கலைக்கான ஊற்றே இப்பிரபஞ்சம் ஒருவருக்கு அளித்திடும் பரிசு. அதன் மீதான கட்டுப்பாடு கைக்குள் அகப்படுவதற்கு யாராக இருந்தாலும் குறிப்பிடத்தக்க சில ப்ராசஸ்களை மேற்கொள்வது அவசியம். ஊற்றும் உந்துதலும் தன்னுள் இருந்தும் அதன் மீதான கட்டுப்பாடு சிலருக்கு வாய்ப்பதில்லை. அப்படி இரண்டும் இருக்கும் படைப்பாளிகள் தங்கள் ஒவ்வொரு படைப்பை உருவாக்கையிலும் அவர்களுக்கே உரிய சில குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி தங்கள் கன்ட்ரோலை அதன்மீது செலுத்தவிடுகிறார்கள். அதற்கென்று சில கருவிகளும் அவர்களுக்கு உண்டு. வெற்றிமாறன் போன்ற தன் படைப்பின் மீதான முழு அதிகாரத்தை வைத்திருக்கும் ஒருவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
‘சினிமா’ எனும் காட்சி ஊடகத்தை பற்றிய முழுமையான புரிதல் வெற்றிமாறனுக்கு நிச்சயம் உண்டு. ஆனால், இதை அவரேகூட ஏற்றுக்கொள்ளமாட்டார். சரி, அவர் படைப்புகளின் மீதான புரிதல், அதாவது அவர் படைக்கும் உலகத்தை பற்றி முழுமையான புரிதல் அவருக்கு உண்டு. காரணம், குறிப்பிட்ட ஒரு நிலத்தையும் அதன் மனிதர்களையும் புரிந்துகொண்டால் மட்டுமே அங்கு ஒரு கதையை கண்டடைய முடியும் என்று அவர் கூறுவதுண்டு. இந்த வித்தை அவருக்கு வாய்த்தது எப்படி. சினிமா எடுக்கப் போகிறேன் என்று முதன்முதலில் கூறியபோது “ சினிமா ஓர் அறிவியல். எனவே நீ அதை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்” என்று சொன்ன அவரின் தந்தை தொடங்கி, சினிமா குறித்து அவருக்கிருந்த பார்வையை மொத்தமாக புரட்டிபோட்ட ஆசான் பாலு மகேந்திராவரை வெற்றிமாறனுக்கு வாய்த்திருக்கும் இக்குணதிற்கான காரணங்கள் நீண்ட நெடியவை. மாறாக, தன் படைப்புகள் என்னவாக வெளிவர வேண்டும் என்று வெற்றிமாறன் கையாளும் சில அம்சங்களில் புலப்பட்டவை இதோ,
அகவுணர்வுகளே கதை ‘இயக்கி’
திரையில் தோன்றும் கதை மாந்தர்களின் உணர்வுகள் பார்வையாளர்களுக்கு கடத்தப்படாதபோது இருவருக்கிடையிலும் ஒரு வித அந்நியத்தன்மை ஏற்பட்டுவிடும். கதையைத் தாண்டி அது ஏற்படுத்தும் உணர்விற்காகவே மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். வெற்றிமாறனை பொறுத்தவரையில் தான் சொல்ல வரும் கதைகளை, உணர்வுகளை முதன்மையாகக் கொண்டே நகர்த்திச் செல்கிறார். அதை வெளிப்படுத்துபவர்களாகவே அவர் உருவாக்கும் கதாபாத்திரங்களும், அவ்வுலகமும் அமைகின்றன. குறிப்பிட்ட சில உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துபவர்களாக அவரின் எந்த ஒரு கதாபாத்திரமும் இருக்காது. வெற்றிமாறனின் உலகத்தில் அனைவரும் சாதாரண மனிதர்கள்தான். மனிதர்க்கே உண்டான அனைத்து குணங்களும் அவர்களுக்குள் புதைந்திருக்கும். சுற்றமும் சூழலும் அவர்களுக்கே உண்டான ஆசைகளையும், கதை நகர நகர சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அக்கதாபாத்திரத்திற்கே உண்டான நியாயங்களின் படியும் அவர்களின் குணங்கள் மாறுபடும். தனக்குத் தேவையான நடிப்பை நடிகர்களிடம் இருந்து பெறவும் கிட்டத்தட்ட இதே வழிமுறையைதான் அவர் கடைபிடிக்கிறார். “ குறிப்பிட்ட காட்சிக்கான உணர்வுநிலை சரியாக நிலவ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாக இருக்கும். என் மனதில் நான் வைத்திருக்கும் உணர்வுகள் அவர்கள் மூலமாக வெளிப்படுகிறதா என்பது மட்டுமே எனக்கு முக்கியம். அதை அவர்கள் எப்படிவேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்” என்று சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
மேலும் வெற்றிமாறன் தன் படங்களில் முதன்மையாக கையாளும் குறிப்பிட்ட சில உணர்வுகள் அவரை தனித்து நிற்கச் செய்கிறது. காதல், நட்பு, ஏமாற்றம், பகை என உலகளாவிய உணர்வுகள் அனைத்தும் அவர் படத்தில் இடம்பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட ஓர் உணர்வு மட்டும் மற்றவற்றை காட்டிலும் மேலோங்கி இருக்கும். படத்தின் சிறு பகுதியாக மட்டுமே அது இடம் பெற்றாலும் அதன் கொடியத்தன்மை அதை மேலோங்கி காட்டச் செய்கிறது. காதல், நட்பு என மேற்கூறிய உணர்வுகள் அனைத்தையும் பொய்யாக்கும் வல்லமை அதற்குண்டு. ஆம், நம்பிக்கை துரோகம் என்னும் உணர்வை ஓர் மனித மனம் அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. நம்பிக்கை உடைபடும் தருணத்தில் வெளிப்படும் உணர்வுகளின் வலிகளை சொற்களுக்குள் அடக்க இயலாது. உடன்பிறந்த தம்பியே முதுகில் குத்தும்போது “ ரவி… என்னடா!” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் செல்வம், எல்லாமும் கைகூடி வருவதற்கான தொடக்கப்புள்ளியை தன் வாழ்க்கை சிதறுண்டு போவதற்கான காரணியாக மாற்றியது, தான் அப்பாவாக பாவித்த பேட்டைக்காரன்தான் என்று தெரிய வரும்போது “ என் மேல உனக்கு அவ்வளவு வெறுப்பாண்ணே” என்று உடையும் கருப்பு, உன்னை மட்டுமாவது காப்பாற்றுகிறேன் என்று கூறி அருகில் வரும் எஸ்.ஐ முத்துவேலிடம் “ ஏன்யா எங்கள ஏமாத்துனீங்க…” என்று கூறும் பாண்டி, கொல்லப்படத்தான் தான் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிந்து “என்னடா இது…” என்று கூறும் ராஜன். இவர்கள் அனைவரும் வெளிப்படுத்தும் உணர்வு ஒன்றுதான்.
ஏமாற்றத்தின் வலியை நமக்கு நெருக்கமானவர்கள் அளிக்கையில் அது பன்மடங்காகி போகிறது. அதன் விளைவே கருப்பு கூறும் “ என்ன செத்துருனு சொன்னா நானே செத்துருப்பேனே அண்ணே, நீ ஏன்னே இத செஞ்ச?” என்பதாகட்டும், “ என் தம்பிங்கள இப்படி பாக்கற மாதிரி ஆகிடுச்சேடா” என்று ராஜனின் வார்த்தைகளாகட்டும் பார்வையாளர்களின் உணர்வுபிழம்பை மேல் எழச்செய்துவிடுகிறது. படத்தின் ‘ஹை-பாய்ண்ட்’-ல் இந்த குறிப்பிட்ட உணர்வு வெளிப்படுமாறு செய்கிறார் வெற்றிமாறன், அல்லது இந்த உணர்வு வெளிப்படுவதால் அக்குறிப்பிட்ட காட்சி படத்தின் மிக முக்கிய பகுதியாக மாறிவிடுகிறது. ஆனால் நம்பிக்கை துரோகம் என்ற உணர்வுநிலை வெற்றிமாறனின் திரைப்படங்களில் மட்டும்தான் வெளிப்படுகிறதா என்ன, இல்லை. பிறகு இவரின் படங்கள் தனித்து நிற்பது எதனால். இங்கேதான் வெற்றிமாறன் எனும் திரைக்கதை ஆசிரியரை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அதிர்ச்சி இரண்டு வகைப்படும்
மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் சாலையில் நீங்கள் நின்றுக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது திடீரென்று ஓர் குண்டுவெடிப்பு அங்கு நிகழ்கிறது. அச்சத்தம் கேட்ட மறுநொடி உங்கள் உடல் அதிர்ந்து ஓர் உணர்ச்சிபெருக்கை நீங்கள் அடைவீர்கள். அக்குண்டு வெடிப்பின் அதிர்ச்சி உங்களுக்குள் எத்தனை காலம் வரை இருக்கும் என்பதை அது ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்து அமையும். இப்போது மீண்டும் முதலில் இருந்து வருவோம், அதே சாலையில் நீங்கள் மீண்டும் நிற்கிறீர்கள். ஆனால், இம்முறை ஓர் மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழப்போவதாக உங்களுக்கு மட்டும் முன்பே சொல்லப்பட்டுவிடுகிறது. அதைப்பற்றி கத்தி கூச்சலிடலாம் என்றால் உங்களின் கை, கால், வாய் என அனைத்தும் கட்டப்பட்டு இருக்கிறது. குண்டு வெடிப்பு எந்த நொடியில் வேண்டுமானாலும் நிகழலாம், உங்களுக்கு அருகிலும் வெடிக்கலாம் அல்லது 50 மீட்டருக்கு அப்பாலும் வெடிக்கலாம். அப்போது உங்கள் மனதில் ஏற்படும் ஓர் உணர்ச்சி இருக்கிறதல்லவா இது ஒருவகை அதிர்ச்சி.
இதில் நடக்கப்போவதை முன்பே அறிந்துவிட்ட பதற்றமும் கலந்திருப்பதால் இது இன்னும் வீரியமானது. இந்த இரண்டு வகைகளையும் தற்போது திரைக்கதை வடிவத்தில் பொறுத்திப்பார்ப்போம். இயல்பாக நகரும் காட்சி ஒன்றில் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடக்கையில் அந்த ஓர் நொடி பார்வையாளன் உறைந்துபோவான். சிலர் அதை முன்பே கணித்திருப்பார்கள். சிலர் அதற்கு பழக்கப்பட்டும் இருப்பார்கள். மறுப்பக்கம் இப்படியொரு பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்பதை அக்காட்சிக்கு முன்பாவே கூறிவிட்டால் அக்குறிப்பிட்ட நொடிக்காக காத்திருப்பான் பார்வையாளன். காட்சியின் இடைப்பட்ட பகுதியை எத்தனை அழுத்தமாக காட்சிப்படுத்த முடிகிறதோ, அத்தனை வீரியமாக அந்த ஓர் நொடி பார்வையாளனை சென்று தாக்கும். காரணம், அக்காட்சி தொடங்கும் மறுநொடி திரையின் அத்தனை ஓரங்களையும் குத்தகைக்கு எடுத்திருப்பான் பார்வையாளன்.
இதில் இரண்டாவது வகையை தன் படங்களில் கையாள்கிறார் வெற்றிமாறன். வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கொல்லப்படும் காட்சியை எடுத்துக்கொள்வோம். ராஜன் மீதமுள்ள நால்வரால் தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது படத்தின் முதல் காட்சியிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. ராஜனை கொன்றுவிடுமாறு முத்து செந்திலிடம் கூறியதும் அக்கொலை அடுத்த காட்சியில் தான் நடக்கப்போகிறது என்பதும் தெரிந்துவிடுகிறது. வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கும் ராஜனை தம்பி வந்து அழைக்கும் மறுநொடி குண்டு வெடிப்புக்கான கவுண்ட்-டவுனும் தொடங்கிவிடுகிறது. திரைக்கு வெளியில் இருப்பதால் நம் கை கால்கள் இயல்பிலேயே கட்டுண்டுதான் இருக்கும். அவர்கள் இருக்கும் உணவகத்திற்குள் நுழைந்ததுமோ அல்லது சிறிது நேரத்திலோ அவர் கொல்லப்படுவதில்லை.
மாறாக தான் செய்த காரியத்திற்காக விளக்கத்தை நால்வரிடமும் கூறுகிறார் ராஜன். அது அவரின் விசுவாசியான குணாவிற்கு மேலும் குழப்பத்தை உண்டு செய்கிறது. இறுதியில் அந்த திட்டத்தில் இருந்து தான் வெளியேறிவிடுவதாகக் கூறி சென்றுவிடுவான் குணா. எதிர்பாராதவிதமாக அவர்களின் திட்டம் ராஜனுக்கு தெரிந்துவிட அதை பயன்படுத்தி தாக்குதலை தொடங்குவான் செந்தில். வேறுவழியில்லாமல் குணாவும் அதில் ஈடுபட பற்றவைத்த வெடிகுண்டு வெற்றிகரமாக வெடித்துத்சிதறும். விசாரணை திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் இதேபோன்றதொரு வடிவத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட காட்சியின் வெற்றி அவ்வளவு எளிதானதா என்ன. இல்லவே இல்லை. இதற்கு பின்னால் ஓர் மிகப்பெரிய வலைப்பின்னல்களை வெற்றிமாறன் உருவாக்க வேண்டியிருக்கிறது.
பட்டாம்பூச்சிகளும் வெற்றிமாறனும்
வெற்றிமாறனின் திரைப்படங்களில் எந்த சிறு காட்சியையும் தேவையில்லாதவை என்று கூறிவிட முடியாது. ஒவ்வொரு காட்சியையும் கதையை நகர்த்துவதற்காகவே அவர் பயன்படுத்த முனைகிறார். இது அவரின் கதைகளில் ‘பட்டாம்பூச்சி விளைவை’ இயல்பில் தூண்டிவிட செய்கிறது. கதை நிகழும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் ஓர் நிகழ்வு, அது கதை மாந்தர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம், அதன் காரணமாக அவர்களின் உணர்வுகள் இயக்கப்பட்டு அதனால் நிகழும் விளைவுகளே வெற்றிமாறன் கதைகளின் பொதுவான அம்சம். இதை இவ்வளவு மேம்போக்காக கூறுவதே குற்றம் என நினைக்கிறேன். காரணம், தன் உலகத்திற்குள் ஓர் மிகப்பெரிய வலைப்பின்னலை அட்டகாசமாய் பின்னியிருப்பார் அவர். இப்பின்னலின் எந்த புள்ளியை தொடக்கமாக வைத்துக்கொண்டாலும் நாம் நினைத்த இடத்திற்கு நம்மால் சென்று சேர்ந்து விட முடியும். இந்த இறுக்கமான தொடர்ச்சி காரணமாவே படத்தின் எந்த ஒரு காட்சியை நீக்கிவிட்டாலும் ‘பட்டாம்பூச்சி விளைவு’ அப்படியே நின்று போய்விடுகிறது. மேலும் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் ஏதோ ஒரு சம்பவமாக தொடக்க புள்ளியை கூறிவிடாமல் வரலாறை துணைக்கு அழைத்துக்கொள்வது அவரின் மகத்தான தனித்திறமை.
இதை விளக்க அத்திரைப்படத்தின் இடைவெளி காட்சியை எடுத்துக்கொள்வோம். செந்திலை அன்பு பின்னாலிருந்து குத்தும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்து முடிகிறது. இதன் தொடக்க புள்ளியை ராஜீவ் காந்தியின் மரணத்தில் வைத்திருப்பார் வெற்றிமாறன். ராஜீவ்வின் மரணம், அதனால் நிகழும் அன்பு-பத்மா சந்திப்பு, பத்மாவிற்காக ஜாவா பழனியை கொல்லும் அன்பு, அன்பை காப்பாற்ற போய் தன் தம்பியை இழக்கும் குணா என தொடரும் இந்த சங்கிலி இடைவெளி காட்சியில் வந்து நிற்கும். சிறையிலிருந்து அன்பு வெளியே வந்த பிறகும் இச்சங்கிலி தொடர்வதை போலவே ராஜனின் வாழ்க்கையிலும் இப்படி ஓர் சங்கிலி இருக்கும். அதுவும் எம்.ஜி.ஆரின் மரணம் என்ற வரலாற்று நிகழ்வின் விளைவாகவே இருக்கும். அன்புவின் அன்றைய நாளில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வராமல் இருந்து அவரின் மரணம் நிகழாமல் இருந்திருந்தால் அவன் ஒரு கேரம் வீரனாக மாறி ஓர் மத்திய அரசு வேலையுடன் தன் வாழ்க்கையை வாழ்ந்திருப்பான். இதுபோன்ற ஏதோ ஒரு விளைவை வெற்றிமாறனின் ஒவ்வொரு படத்திலும் கண்டெடுத்துவிடலாம். மேற்கூறிய மூன்று அம்சங்களும் வெற்றிமாறனுக்கு கைக்கூடிவருவதற்கான காரணம் கதை நிகழும் ஓர் குறிப்பிட்ட உலகத்தை, அது சார்ந்த மனிதர்களை புரிந்துகொள்ள செலவிடும் அவரின் அபாரமான உழைப்பு.
ஒவ்வொரு அறைக்கும் ஓர் வாசமுண்டு
“ சினிமா என்பது ஓர் காட்சி ஊடகம். ஒரு ஊரில் பாட்டி வடை சுடுகிறார் என்ற ஒற்றை வரியை திரைவடிவமாக காட்சிப்படுத்த அந்த பாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் கிராமத்து பாட்டியா அல்லது நகரத்து பாட்டியா. கிராமம் என்றால் ஏதேனும் ஒரு கடற்கரை கிராமமா. மேலும் அப்பாட்டி பணக்கார வீட்டை சேர்ந்தவரா என இத்தனை கேள்விகளுக்கு ஒரு இயக்குநர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது” என்று இந்த கலை வடிவம் குறித்த பாலு மகேந்திராவின் விளக்கத்தை குறிப்பிட்டிருக்கிறார் வெற்றிமாறன். அதனாலேயே தான் உருவாக்கப்போகும் உலகத்தை புரிந்துகொள்வதற்கும் அதன் மனிதர்களை படிப்பதற்கும் அபார உழைப்பை அவர் ஒவ்வொரு முறையும் போடுகிறார். இதன் காரணமாகவே, அவரின் எந்த ஒரு கதாபாத்திரங்களும் கதை நிகழும் உலகத்தில் இருந்து துளியும் அந்நியப்படாமல் காட்சியளிக்கின்றன.
“ஒவ்வோர் அறைக்கும், ஒரு வடிவம் உண்டு; ஒரு வாசம் உண்டு. அந்தந்த அறைகளில் நின்று பேசும்போது வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. மற்ற இடங்களைவிட, கிச்சனில் நின்று அம்மாவிடம் பேசுவது இன்னும் நெருக்கமானது” ஓர் அறையை பற்றிய வெற்றிமாறனின் விளக்கமே இது. அப்படியென்றால் தான் இயக்கும் படம் நிகழும் நிலப்பரப்பை அவர் எத்தனை ஆழமாய் புரிந்து கொள்ள முயல்வார் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள். ஆடுகளம் திரைப்படத்திற்கான கதைக்களமாக மதுரை மாநகர் முடிவுசெய்யப்பட்டு இங்கு சுற்றி பார்த்தப்பின் மலைகள் சூழ்ந்த ஓர் நகரமாகவே மதுரை தனக்கு தோன்றியதாக குறிப்பிட்டிருப்பார் அவர். அதனால் ஆடுகளம் படத்தின் பெரும்பாலான வைட்- ஷாட்டிகளின் மலை தெரியும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பார் அவர். அதேபோல பேட்டைக்காரனின் வசிப்பிடமும் அக்கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்திற்கேற்றாற்போல இருக்க வேண்டும் என்பதற்காக ஓர் மேடான பகுதியில் அவரின் வீட்டை அமைத்திருப்பார்.
ஆனாலும் முதல் ஷெட்யூலின் முடிவில் இத்திரைப்படத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் இழந்தது போல வெற்றிமாறனுக்கு தோன்றியது ஏன். மதுரை மாநகர் வெற்றிமாறனுக்கு முற்றிலும் புதியதொரு நிலப்பரப்பு. ஆடுகளத்தின் வசனங்கள் அனைத்தும் மதுரை வட்டார வழக்கில் இருந்தன. வட்டார வழக்கு என்பது மக்கள் தங்கள் மொழியை உச்சரிக்கும் ஓர் முறை மட்டுமல்ல. அம்மக்களின் மனநிலை, எண்ண ஓட்டம் என அனைத்தையும் பிரதிபலிக்கும் ஒன்றே அது. இதனால் வட்டார வழக்கில் எடுக்கப்பட்ட சீன்கள் அவருக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை. எனவே, இதை தீர்க்க புதியதொரு முறையை கையாள முடிவு செய்தார் அவர். ஒவ்வொரு காட்சிக்குமான வசனங்களும் அவருக்கு நன்கு பழக்கப்பட்ட சென்னை மக்களின் வட்டார வழக்கத்தில் அவர் எழுத அதை விக்ரம் சுகுமாரன் அப்படியே மதுரை வழக்கத்திற்கு மாற்றாமல் கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்திருப்பார். இதை பின்பற்ற தொடங்கியபிறகே அப்படத்தின் கட்டுப்பாடு தன்னிடம் ஓரளவுக்கு வந்ததாக வெற்றிமாறன் குறிப்பிட்டிருப்பார். இதற்கு பின் நடந்தவற்றை உலகம் அறியும். தன்னை மீறி செல்லும் கட்டுப்பாடு தனக்கு மீண்டும் வர அவர் கடைபிடிக்கும் வழிமுறைகளை அவர் அறிவது எப்படி. மிக எளிய பதில் – பாலு மகேந்திரா.
சினிமா – பாலு மகேந்திரா – வெற்றிமாறன்
“ ஓர் திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே அதன் முரண் தொடங்கிவிட வேண்டும், அதிகபட்சமாக முதல் 10 நிமிடத்திற்குள்ளாவது அதை தொட்டுவிட வேண்டும், இல்லையென்றால் அக்கதையை நாம் தொடக்கூடாது” என்று பாலு மகேந்திரா கூறுவதாக குறிப்பிட்டிருப்பார் வெற்றிமாறன். அதற்கேற்றாற் போல தன் ஒவ்வொரு படத்தையும் (விசாரணை தவிர்த்து) முரணில் இருந்தே தொடங்குகிறார் அவர். அது கதையின் இடைப்பகுதில் நடக்கும் ஏதோ ஒரு காட்சியாக இருக்கும். அப்படி செய்வது பார்வையாளன் படத்திற்குள் மிக எளிதில் இழுக்கப்பட்டுவிடுவான். தன் மாணவர்கள் அனைவரும் ஓர் கமர்ஷியல் ஹிட் கொடுத்து அதன் மூலம் நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பது பாலு மகேந்திரவின் ஆசையாக இருந்திருக்கிறது. இதையும் ஓர் மாணவனாய் தற்போது வரை செய்துவருகிறார் வெற்றிமாறன். இலக்கியம் மற்றும் சினிமா குறித்தான புரிதல் அவருக்கு பாலு மகேந்திரா மூலமாகவே ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் தான் எடுக்கும் ஓவ்வொரு ஷாட்டும் சாருக்கு புடிக்குமா அல்லது இந்த காட்சிக்கு சார் எப்படி ஷாட் வைப்பார் என்ற யோசனையே இருக்கும் என்று கூறியுள்ளார் வெற்றிமாறன்.
மேலும் படம் எடுக்கும் கலையும் கதை சொல்லும் கலையும் வெவ்வேறானது என்பதும் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலத்தில் தான் அவருக்கு புலப்பட்ட ஒன்று. கதை சொல்வது சிலருக்கு இயல்பிலேயே வந்துவிடும். ஆனால் வெற்றிமாறனுக்கு இக்கலை ஓர் நீண்ட பயிற்சிக்கு பின்னரே கைகூடியது. இப்படி பாலு மகேந்திராவின் பயிற்சி பட்டறையை பற்றி மட்டுமே ஓர் தொடர் எழுதலாம்.
வெற்றிமாறன்- 47
“ ஓர் இயக்குநருக்கு படம் கிடைக்கும்போது, அவருக்கு மிகப்பெரிய அதிகாரம் கொடுக்கப்படுகிறது. பணம் போடும் முதலாளி, நடிகர்கள், மற்ற கலைஞர்கள் அனைவரும் அந்த இயக்குநரின் எண்ணத்தையும் முடிவையும் சார்ந்தே இருக்கிறார்கள், மேலும் சினிமா என்பது முதலில் ஓர் காமர்ஸ், அடுத்தது அறிவியல் பின்னர் தான் கலை” என்று சினிமா பற்றிய தன் புரிதலை மிக எளிதாக சுருக்கி பல இடங்களிலும் வெளிப்படுத்திவருகிறார் வெற்றிமாறன். ஆனால் ஒரு படத்தில் இருந்து மற்றொன்றுக்கு செல்லும் அவர் நினைப்பது ஒன்றை மட்டும்தான் “ முன்பு செய்த தவறுகள் இங்கு குறைந்தால் அதுவே எனக்கு வெற்றி” என்று சிம்பிளாக சொல்லிவிடுகிறார் அவர்.
தற்போது விடுதலை திரைப்படத்தை சிறுமலையின் அடர் வனங்களில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். அதற்கு அப்படகுழுவினர் கொடுத்துள்ள உழைப்பு அபாரமானது. கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் வெற்றிமாறன் தற்கால இயக்குநர்களில் அலெக்சாண்ட்ரா இனாரிட்டோவை தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருப்பார். மேலும் அவரின் ‘ரெவெனன்ட்’ படத்தை பார்த்து தான் அப்படியே பிரமித்து போய் உட்கார்ந்துவிட்டதாக கூறுவார். உறையும் குளிரில் எடுக்கட்டப்பட்டிருக்கும் அப்படமும் பெரும்பாலும் வெளியே தெரிய வேண்டாம் என்று புதைந்துகிடைக்கும் மனித உணர்வுகளை கொண்டே இயங்கும். விடுதலையின் மேக்கிங் வீடியோக்களை பார்க்கையில் ரெவெனன்ட் படக்காட்சிகள் மனதில் வந்து போகாமலில்லை. மேலும் விடுதலை திரைப்படமும் நல்லவன்-கெட்டவன் குறித்த மதிப்பீடுகளையும் கற்பித்தல், நம்பிக்கை போன்ற விஷயங்களை தொட இருப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். தத்துவார்த்தரீயாக அது ஒரு மிகப்பெரிய வெளி, ஆனால் அதை தன் படத்துக்குள் நிச்சயம் சுருக்கியிருப்பார். ஏனென்றால், அவர் வெற்றிமாறன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெற்றி சார்!
விடுதலை பாகம் -1 திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக 04-09-2022 அன்று வெற்றிமாறன் பிறந்தநாளுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது!