ஜெய்சல்மார்: சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “அவர்கள் சனாதன தர்மத்தை தாக்குகிறார்கள். சனாதன தர்மத்தை திமுக தாக்குகிறது. ஆனால், காங்கிரஸ் அமைதி காக்கிறது. ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை? சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஏதும் பேசாமல் இருக்கிறார்கள்?
சனாதன தர்மம் என்பது வெறும் பிரார்த்தனைக்கானது மட்டுமானது அல்ல. உலகமே ஒரு குடும்பம் என்ற செய்தியை தருவது சனாதன தர்மம். திமுக தலைவர் என்ன பேசினாரோ, அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவரது பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு அவர்களை மன்னிக்காது” என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், “உதயநிதி ஸ்டாலின், ஒன்று சனாதன தர்மம் குறித்த புரிதல் இல்லாதவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் நெறிமுறைகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது அவருக்கு வெறுப்பு இருக்க வேண்டும். அதுதான் அவரை இவ்வாறு பேசத் தூண்டியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, அதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஒரு கூட்டணியின் மனநிலை இது. இந்தப் பேச்சு ஜனநாயகத்துக்கு எதிரானது; மனிதத் தன்மைக்கு எதிரானது. உதயநிதி ஹிட்லர் என அவரை அழைப்பது அவருக்கு பொருத்தமானதாக இருக்கும்” என கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “அவர் பதற்றத்தில் இருக்கிறார். சனாதன தர்மத்தை யாராலும் தடுக்க முடியாது. இப்போது, மற்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகில் எல்லா இடங்களிலும் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. சனாதன தர்மம் என்பது ஓர் ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கானது. அவர்களுக்கு (திமுக) ஒழுக்கம் என்ற வார்த்தை பிடிக்காது. சனாதனத்தை படித்து அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவரது இந்த பேச்சு அவரது அறியாமையைக் காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்கள் கட்சியின் கருத்தைத் தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளது. நாங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் மதிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
கர்நாடக மாநில அமைச்சரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே, “சமத்துவத்தை வளர்க்காத அல்லது மனிதனாக இருப்பதற்கான மரியாதையை உறுதி செய்யாத எந்த மதமும் என்னைப் பொறுத்தவரை மதம் அல்ல” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, சனாதன ஒழிப்பு மாநாட்டில் ‘சனாதானக் கொள்கையை அழிக்க வேண்டும்’ என்றே தான் பேசியதாகவும், ஆனால் அதனை பாஜக திரித்து போலியான செய்திகளைப் பரப்புவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்தியைப் பரப்புகிறது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
அதேபோல், “சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசுகின்ற ஒன்றாகும். அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்றதொரு திரிபுவாதத்தை, பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அதன் விவரம்: “கருத்தியல், கோட்பாடு குறித்து பேசுவது இந்துக்களுக்கு எதிராக திரிக்கப்படுகிறது” – திருமாவளவன்