அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகனின் கட்சிப் பதவி பறிப்பு – பின்னணி என்ன?

விழுப்புரம்: பல்வேறு புகார்களின் எதிரொலியாக, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியர் அலி மற்றும் அவரது மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவியை திமுக தலைமை பறித்துள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியர் அலி விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரோமியன் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்த அவரது மருமகன் ரிஸ்வான் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பள்ளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஷேக் வாகித் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுத்தது, பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கியது, மரக்காணம் கள்ளச்சாராய சம்பவத்தில் தொடர்புடைய நபராக கருதப்படும் மரூர் ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது, கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததும் நடந்தது.

அதன்பின், கடந்த 31-ம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வாயில் கருப்புத் துணி கட்டி எதிர்ப்பை பதிவு செய்தது, கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேரும் தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை எனக் குற்றம் சாட்டியது போன்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக திண்டிவனம் நகர்மன்றக் கவுன்சிலர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் அமைச்சரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையின் இச்செயல், மஸ்தான் மீதான அதிருப்தியை, அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோர் மூலம் வெளிப்படுத்தியிருப்பதாகவும், விரைவில் அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளது எனவும் அவரது எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.