இலங்கையில் மழை பெய்யுது.. ஆசிய கோப்பையை பாகிஸ்தானுக்கு மாத்துங்க

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இம்முறை பாகிஸ்தான் நடத்துகிறது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டதால் போட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளன. செப்டம்பர் 17 ஆம் தேதி வரை கொழும்புவில் போட்டிகள் அனைத்தும் நடைபெறுகின்றன. ஆனால் அதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியின் இரண்டாவது பாதி மழையால் கைவிடப்பட்டது. இன்னும் ஒரு மாதத்துக்கு கன மழை இருக்கும் என கூறப்பட்டிருப்பதால் போட்டியை வேறு மைதானங்களுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இப்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, இறுதிப் போட்டி உட்பட ஆறு போட்டிகளுக்கான மைதானம் கொழும்பில் இருந்து மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. சூப்பர்-4 சுற்று ஆட்டங்களும் மற்றும் இறுதிப் போட்டியும் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். இப்போதைய அட்டவணைப்படி செப்டம்பர் 9, 10, 12, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொழும்பில் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும். கொழும்பில் பலத்த மழை பெய்து வருவதால், போட்டிகள் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கோ அல்லது தம்புள்ளையில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கோ மாற்றப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரத்தில் கொழும்பு நகரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இலங்கையின் மத்திய வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். இதனை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரி ஜகா அஷ்ரஃப், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது, இலங்கையில் கனமழை பெய்து கொண்டிருப்பதால் எஞ்சியிருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இதற்கு ஜெய்ஷா எந்த பதிலும் அளிக்கவில்லையாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.