புதுடில்லி :ராஜஸ்தானில், ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில், 2.32 கோடி ரூபாய் ரொக்கம், தங்கக் கட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
நம் நாட்டில் உள்ள கிராமங்களில், அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகிக்கும் வகையில், மத்திய அரசின் நீர்வளத் துறை, ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த பணிகளுக்கான டெண்டரை பெற, தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதம்சந்த் ஜெயின், மகேஷ் மிட்டல் உள்ளிட்டோர், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, கடந்த 1ம் தேதி, ராஜஸ்தானில், பதம்சந்த் ஜெயின், மகேஷ் மிட்டல் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த சோதனைகளில் கணக்கில் வராத, 2.32 கோடி ரூபாய் ரொக்கம், 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1 கிலோ தங்கக் கட்டி, டிஜிட்டல் ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறை நேற்று தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement