சென்னை:
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து இந்தியா முழுவதும் சர்ச்சையாகி வரும் நிலையில், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என உத்தரபிரதேசத்தில் ஒரு சாமியார் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளே உதயநிதிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதுதான் இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை உணர்த்துவதாக உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ ஒருபடி மேலே சென்று உதயநிதியை ஒரு ஜூனியர் அரசியல்வாதி என்றே கூறிவிட்டார்.
இந்நிலையில், தமிழக பாஜக நிர்வாகி குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால், எனக்காக மக்கள் கோயிலை கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். நம்பிக்கை, மரியாதை, அன்பு, எல்லோரும் சமம் என்பதே சனாதன தர்மத்தின் கோட்பாடு. திக தலைவர் கி. வீரமணியே சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்றுக்கொண்ட பிறகு, திமுகவுக்கு ஏன் மறுக்கிறது?” அவர்களின் தோல்வியில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்கான வழி இது” என குஷ்பு கூறியுள்ளார்.