காவிரி மேலாண்மை வாரியம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது: தமிழக அரசு

சென்னை: நடப்பாண்டில் தமிழகத்துக்கு கிடைக்கப் பெற வேண்டிய ஜூன் 1 முதல் ஆக.27 வரையிலான குறைபாட்டு நீரான 8.988 டிஎம்சியை, கர்நாடகா அளிக்க எந்த நடவடிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் எடுக்காமலிருப்பது, அது தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்ட செயலாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2023-2024 பாசன ஆண்டில் கர்நாடகாவிடம் இருந்து உரிய நீர் பங்கைப் பெற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டூர் நீர்த்தேக்கத்தில், திட்டமிடப்பட்ட நாளான 12.06.2023 அன்று இருந்த 69.25 டிஎம்சி நீர் இருப்பு (carryover storage), இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (IMD) அறிக்கையின்படி இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவில் இருக்கும், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணைப்படி பிலிகுண்டுலுவில் பெறப்பட வேண்டிய நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது.

> 2023-2024 நீர் ஆண்டில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) 81வது, 82வது, 83வது, 84வது மற்றும் 85வது கூட்டங்களை 30.06.2023 முதல் 28.08.2023 வரை நடத்தியது, அவ்வாறே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 21வது, 22வது மற்றும் 23வது கூட்டங்கள் 16.06.2023, 11.08.2023 மற்றும் 29.08.2023 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் தமிழக உறுப்பினர் தமிழகத்தின் பங்கை கர்நாடகா குறிப்பிட்ட அட்டவணைப்படி அளிக்க வலியுறுத்தி வந்தார்கள். இருப்பினும் கர்நாடக அரசு அட்டவணைப்படி நீரை அளிக்கவில்லை. குறைபாடு ஜூன் முதல் அதிகரித்து வந்தது. இதை சரிசெய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

> கர்நாடகாவில் உள்ள 4 பெரிய நீர்த்தேக்கங்களின் 09.08.2023 நிலவரப்படி சராசரி ஆண்டில் கிடைக்க வேண்டிய நீரில் 42.54% குறைபாடு உள்ளது என காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கணக்கிட்டுள்ளது. இவ்வாறு குறைபாட்டை கணக்கிடுவது ஒன்றிய அரசின் 01.06.2018 தேதியிட்ட அரசிதழ் அறிக்கையின்படி இருக்க வேண்டும். இதன்படி, 09.08.2023 அன்று வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 37.971 டிஎம்சி நீர் குறைப்பாடுள்ளது. இதை உடனே அளிக்கவும், அதன் பிறகு அட்டவணைப்படி அளிக்கவும் கர்நாடக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இவைகளை கருத்தில் கொள்ளாமல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) தானே கணக்கிட்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரை பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், 10.08.2023 அன்று நடந்த 84வது கூட்டத்தில் 10.08.2023 அன்று 11 ஆகஸ்ட் 2023 முதல் அடுத்த 15 நாட்களுக்கு 15,000 கனஅடி நீர் விடுவிக்க கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது.

தமிழ்நாடு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) 11.08.2023 அன்று நடைபெற்ற 22வது கூட்டத்தில் குறைந்தது வினாடிக்கு 24,000 கன அடி தேவை என்றும் ஆகையால் கிடைக்க வேண்டிய குறைபாட்டு நீரை உடனளிக்கவும், அதை தொடர்ந்து அட்டவணையின்படி நீரை பெற்றுத்தரவும் கேட்டுக்கொண்டது. ஆனால் தமிழகத்தின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக, கர்நாடகம் விடுவிக்க வேண்டிய நீரின் அளவை 15,000 கனஅடியிலிருந்து (CWRC) 10,000 கனஅடியாக (CWMA) எந்த முகாந்திரமும் இல்லாமல் குறைத்தது. மேலும், பிலிகுண்டுலுவில் 01.06.2023 முதல் 09.08.2023 வரையிலான 37.971 டிஎம்சி பற்றாக்குறையை கர்நாடகா அளிக்க எந்தவித ஆணையையும் பிறப்பிக்க தவறிவிட்டது.

> 28.08.2023 அன்று நடைபெற்ற கூட்டத்திலும் CWRC இந்த குறைபாடு ஆண்டில் தமிழகத்துக்கு 27.08.2023 வரை குறைபாடு விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய மீதமுள்ள நீர் 8.988 டிஎம்சி என கணக்கிட்டுள்ளது. இருப்பினும் இந்த நீரை பெற்றுத்தர எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை, ஆனால் 29.08.2023 முதல் 12.09.2023 வரை கிடைக்க வேண்டிய நீர் குறைபாட்டை கணக்கில் கொண்டு, 9.341 டிஎம்சி (7200 கனஅடி வீதம்) என கணக்கிட்டு அதையும் எக்காரணமும் இல்லாமல் வினாடிக்கு 5,000 கன அடி என குறைத்து பிலிகுண்டுலுவில் அளிக்க கர்நாடகாவை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், 29.08.2023 அன்று நடைபெற்ற 23வது கூட்டத்தில், CWMA 5,000 கனஅடியாக எந்த அடிப்படையும் இல்லாமல் குறைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும், 01.06.2023 முதல் 27.08.2023 வரையில் தமிழகத்துக்கு கிடைக்கப்பெற வேண்டிய குறைபாடு நீர் 8.988 டிஎம்சி பற்றி எவ்வித அறிவுறுத்தலும் அளிக்கவில்லை. தமிழகம் குறைந்தது வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் 28.08.2023 முதல் 10 நாட்களுக்கு கர்நாடகா பிலிகுண்டுலுவில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

> 14.08.2023 அன்று உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில் தமிழகத்துக்கு குறைந்தது வினாடிக்கு 24,000 கன அடி வீதம் ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கவும், அதன்பின் அட்டவணைப்படி அளிக்கவும் காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) தக்க நடவடிக்கை எடுக்க ஆணையிடுமாறு, உச்ச நீதிமன்றத்தை வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் 31.08.2023 அன்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், நடப்பாண்டில் தமிழகத்துக்கு கிடைக்கப்பெற வேண்டிய 01.06.2023 முதல் 27.08.2023 வரையிலான குறைபாட்டு நீரான 8.988 டிஎம்சி (வினாடிக்கு 7000 கன அடி) CWRC கணக்கிட்ட கர்நாடகா அளிக்க எந்த நடவடிக்கையும் CWMA எடுக்காமலிருப்பது, அது தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்ட செயலாகும்.

மேலும், பற்றாக்குறையை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் 29.08.2023 முதல் 12.09.2023 வரை அளிக்கப்பட வேண்டிய 9.341 டிஎம்சி என அதுவே கணக்கிட்டபோதிலும் (வினாடிக்கு 7200 கன அடி) அதையும் வினாடிக்கு 5000 கன அடியாக குறைத்துள்ளது எப்படி கருதினாலும் சரியானது அல்ல. மேலும், எதிர்காலத்தில் பிலிகுண்டுலுவில் நீரை பெறுவதை உறுதி செய்வதற்கும், அறிவுறுத்துமாறும், CWMA க்கு உத்தரவிடப்பட வேண்டியும் அது கர்நாடகாவுக்கு தகுந்த ஆணையை பிறப்பிக்க வேண்டியும் அந்த மனுவில் உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கினை அவசரம் மற்றும் அவசியம் கருதி, 01.09.2023 அன்று தமிழக அரசு கோரியதன் பேரில், உச்ச நீதிமன்றம் 06.09.2023 அன்று விசாரணை செய்ய ஆணையிட்டுள்ளது.

தமிழக அரசு விவசாய பெருமக்களின் நலன் காக்கவும், தமிழகத்தின் உரிமையை காக்கவும் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.