சேகர் பாபுவின் அமைச்சர் பதவிக்கு பக்கா ஸ்கெட்ச்: பெரிய திட்டத்தோடு களமிறங்கும் அண்ணாமலை

தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அத்துடன், சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாக மாற அவருக்கு எதிராக அமித்ஷா, ஜெ.பி.நட்டா என பாஜகவின் முன்னணி தலைவர்களே வரிந்துகட்டிக்கொண்டு கருத்து தெரிவித்தனர்.

இந்துக்களின் உணர்வை புண்படுத்திவிட்டதாக உதயநிதிக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சனாதனம் குறித்து தான் பேசியது சரிதான் என்றும் தனது பேச்சில் உறுதியாக இருப்பதாகவும், என் மீது எந்த வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலினோடு அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டதை பாஜக சர்ச்சையாக மாற்றியுள்ளது. இந்து கோயில்களை நிர்வகிக்கக் கூடிய இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக இருப்பவரே, அதற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொள்கிறார் என பாஜக குற்றம்சாட்டியது.

இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை” என்று கூறியுள்ளார்.

திமுக மாநாட்டில் தெறிக்கவிட்ட அன்பில் மகேஷ்..

ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார் என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை, இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.