விருத்தாசலம்: கிராமப்புற மக்களின் வறுமையை போக்கும் விதமாக பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து கிராம பகுதிகளில் உள்ள பேருந்து செல்லும் சாலைகள் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் சாலைகள் தார் சாலைகளாக முழுவதுமாக செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் கிராம பகுதிகளிலிருந்து நகர பகுதிகளுக்கு தங்கு தடையின்றி போக்குவரத்து செல்ல வழிவகை செய்யப்படும்.
அனைத்து காலங்களிலும் ஆண்டு முழுவதும் உதவக்கூடிய வகையிலும் சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்கள் தொகை சுமார் 500 பேர் வசிக்கும் அனைத்து குக்கிராமங்களையும் சாலைகள் மூலம் இணைக்க இத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசின் மூலம் இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், மாநிலத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை மூலமே இத்திட்டம் செயலாக்கம் பெறுகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டாலும், சாலைகள் நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்வைக்கின்றனர். இந்த சாலைகள் குறித்த குடிமக்கள் தகவல் பலகையிலும் முழுவிவரங்களையும் வெளியிடாமல், அரை குறையோடு குறிப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்று, முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் தற்போது முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு நடைபெறும் பணிகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், குடிமக்கள் தகவல் பலகை வைக்கப்பட வேண்டும். அந்த தகவல் பலகையில், சாலையில் நீளம், அகலம், உயரம், பயன்படுத்தப்படும் பொருட்கள், திட்ட மதிப்பீட்டுத் தொகை, பணியை செயல்படுத்தும் காலம், ஒப்பந்ததாரர், பணியை மேற்பார்வையிடும் பொறியாளர், கண்காணிப்பு செய்யும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரது பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் உள்ளிட்டவை குறிப்பிட வேண்டும்.
ஆனால் இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்ற சாலை பணிகள் குறித்த விவரங்கள் குடிமக்கள் தகவல் பலகையில் முழுமையாக இடம் பெறாமல், முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சாலை பணிகளின் விவரங்கள் குடிமக்கள் தகவல் பலகையில் முழுமையாக இடம் பெறுகிறது.
இவ்விரண்டு பணிகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்களே மேற்கொள்ளும் நிலையில், பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்ட பணிகள் குறித்து குடிமக்கள் தகவல் பலகையில் முழுமை பெறாமல் இருப்பது ஏன் என்பதே உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கேள்வியாக உள்ளது.