செஞ்சி மஸ்தானுக்கு கட்டம் கட்டிய ஸ்டாலின் – தலைமைக்கு சென்ற புகார்: உடனே பாய்ந்த நடவடிக்கை – அடுத்து சிக்கப்போவது யார்?

தமிழக அரசில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சராகவும், திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் செஞ்சி மஸ்தான். இவரது மகன் மொக்தியார் அலி விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராகவும், மருமகன் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவரையும் பதவியில் இருந்து நீக்கி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது திமுக தலைமை.

இதுதான் விழுப்புரம் மாவட்ட அரசியல் இன்று ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை, பல ஆண்டுகளாக அவர் வகித்து வந்த செஞ்சி நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடி காட்டி இருந்தது திமுக தலைமை. இந்த நிலையில் செஞ்சி மஸ்தான் குடும்பத்தில் இருந்து மேலும் இருவர் நீக்கப்பட்டுள்ளனர்.

செஞ்சி மஸ்தானை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரின் பதவியையும் பறித்ததற்கான பின்னணி காரணங்களும் வெளிவந்துள்ளன. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவிலும், அரசு நிர்வாக விஷயங்களிலும் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினரின் தலையீடு அதிகமாக இருப்பதாக உட்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே புகார் வாசித்து வந்தனர். இதனால்தான் செஞ்சி மஸ்தான் தம்பி பதவி பறிபோனது. ஆனாலும், குடும்பத்தினரின் தலையீடு மட்டும் தீர்ந்தபாடில்லை என்கிறார்கள் திமுகவினர்.

இந்த நிலையில் அமைச்சரின் மருமகன் ரிஸ்வானின் தலையீடு திண்டிவனம் நகராட்சியில் அதிகரித்துவிட்டதாக புகார் தெரிவித்து 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததோடு, முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கவுள்ளதாகவும் அறிவித்தனர். அமைச்சரிடம் சென்று முறையிட்டால் மாப்பிள்ளையிடம் கேளுங்கள் என்று மாற்றிவிடுகிறார், எங்களை அவமானப்படுத்துகிறார் என்று குமுறியிருந்தனர்.

தென்காசி மாவட்ட திமுக ரிப்போர்ட் சரியில்லை.!

இதனால் செஞ்சி மஸ்தானை நேரில் அழைத்து திமுக தலைமை அவரை கடுமையான கண்டித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் அவரது குடும்பத்தினரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவியோ அல்லது மாவட்டச் செயலாளர் பொறுப்போ பறிக்கப்படவில்லை. ஏனெனில், ஏற்கனவே இருந்த இரண்டு இஸ்லாமிய அமைச்சர்களில் ஆவடி நாசர் அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது, தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரே சிறுபான்மையின அமைச்சர் மஸ்தான் தான். ஏற்கனவே திமுக அரசின் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் இல்லை என பாஜக, அதிமுக உள்ளிட்டவை பேசி வருகின்றன. இந்த நிலையில் செஞ்சி மஸ்தானை நீக்கினால் அது தேவையற்ற சச்சரவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அவர் மீது நடவடிக்கை இல்லை என்கிறார்கள்.

அதே சமயம் இது தொடர்ந்தால் அமைச்சரின் பதவியையே பறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும், மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற அமைச்சர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே இந்த நீக்கம் உள்ளது எனவும் தெரிவிக்கிறார்கள் விழுப்புரம் உடன் பிறப்புகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.