புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ‘எனது மண், எனது தேசம்’ இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட உள்ளது.
அமிர்த கலச யாத்திரை என்றழைக்கப்படும் இந்த இயக்கத்தை பஞ்சாபின் பக்வாரா பகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவதால் நேரம் விரயமாகிறது. மத்திய அரசும் வேட்பாளர்களும் பெரும் தொகையை செலவிட நேரிடுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் நேரமும் பணமும் சேமிக்கப்படும். ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு நன்மை அளிக்கும். இதைவிட எதிர்க்கட்சிகளிடம் சிறந்த திட்டங்கள் இருந்தால், அவர்கள் தாராளமாக தங்கள் திட்டங்களை முன்வைக்கலாம்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இண்டியா கூட்டணி அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வருகிறது. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.