சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றவியல் வழக்குத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இவரது பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், உதயநிதிக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி, தமிழக பாஜக சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வெறுப்பை தூண்டும் வகையில்..: இது தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் ஏ.அஸ்வத்தாமன், ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை கொசுக்கள், டெங்கு, கரோனா மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு, சனாதன தர்மம் போன்றவற்றை ஒழிக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார். இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் நோக்குடனும், சனாதன தர்மம் மீது வெறுப்பைத் தூண்டிவிடும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் உதயநிதி வேண்டுமென்றே பேசியுள்ளார்.
நல்லிணக்கத்துக்கு பாதகம்: மதத்தின் அடிப்படையில் பகையை வளர்க்கும் அவரது பேச்சு, நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமாக அமைகிறது. எனவே, இந்து சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், உதயநிதி ஸ்டாலின் மீது காவல் துறையில் புகார்களை அளித்து வருகின்றன.