புதுடெல்லி: பிரிட்டனைச் சேர்ந்த டெலிகிராப் நாளிதழில் எழுத்தாளர் பென் ரைட் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
பொதுவாக பிளவுபட்ட அரசியலில் சிக்கித் தவிக்கும் இந்தியா, பிரதமர் மோடியின் கீழ் பெரும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உட்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, சட்ட சீர்திருத்தங்கள், அடிப்படை நலன் திட்ட மேம்பாடு, உள்கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்டவை சாத்தியமாகியுள்ளன.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4-ம் இடத்தை பிடித்து இந்தியா ராக்கெட் வேக வளர்ச்சியை அடைந்துள்ளது. இது, உலக அளவில் பிரதமர் மோடியின் தலைமையை உற்று நோக்க வைத்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்பது சர்வதேச நாணய நிதியம் மட்டுமின்றி உலகின் பிரபல மதிப்பீட்டு நிறுவனங்கள் உறுதிபட கூறியுள்ளன.
வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் இந்தியா இருப்பதை சில்லறை விற்பனையகங்களைத் திறந்த ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மின்னணு, விண்வெளி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் செயல்பாடு சிறப்பானதாக மாறி வருகிறது. குறிப்பாக, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவில் தங்களது வர்த்தக உறவுகளை அதிகரித்துக் கொள்வதில் தற்போது ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் சில சிக்கல்கள் இருந்தாலும், நிச்சயமான, தைரியமான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் தலைமையிலான ஸ்திரமான அரசியல் நடவடிக்கைகளால் அந்த இலக்குகள் எட்டப்பட வேண்டும். இவ்வாறு பென் ரைட் தெரிவித்துள்ளார்.