புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டு முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்கள் 37 பேர் எம்.பி.பி.எஸ்.,பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் நடைபெறும் மருத்துவக் கல்வி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த கோப்பு கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதன் காரணமாக மாநிலத்தில் மருத்துவ படிப்பிற்கு இதுவரை கலந்தாய்வு நடைபெறாததால், கடும் விமர்சனம் எழுந்தது.
அதனையொட்டி கவர்னர் தமிழிசை, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு கோப்பிற்கு விரைவில் மத்திய அரசின் ஒப்புதலை பெற்று குறித்த காலத்திற்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்படும் என்றார்.
அதே வேளையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு செப். 5ம் தேதி தொடங்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதிபட தெரிவித்து இருந்தார். ஆனால் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை சென்டாக் வெளியிடாததால், முதல்வர் அறிவித்தப்படி இன்று மருத்துவ படிப்பிற்கும் கவுன்சிலிங் நடைபெறுமா என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவியது.
இந்நிலையில், மத்திய உள்துறைக்கு அனுப்பப் பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு கோப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு சென்ற நிலையில், இறுதி கட்டமாக நேற்று தலைமை செயலர் மற்றும் சுகாதார துறை செயலரும், மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோப்பிற்கு ஒப்புதல் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததை தொடர்ந்து, மத்திய அரசு உடனடியாக, புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளித்தது. இது அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கலந்தாய்வு உண்டா…
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று 5ம் தேதி துவங்கும் என முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பில்லை. தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியில் முதல்முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.
எனவே சட்டப்படி இதுவரை விண்ணப்பிக்காத அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் சட்ட சிக்கல் எழும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத அரசு பள்ளி மாணவர்களிடம் விண்ணப்பம் பெற்ற பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்
எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும்
10 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 எம்.பி.பி.எஸ்., சீட் மற்றும் 11 பி.டி.எஸ்., சீட் மற்றும் 4 பி.ஏ.எம்.எஸ்., சீட் கிடைக்கும்.
எம்.பி.பி.எஸ்.,சில் கிடைக்கும் 37 சீட்டில் அரசு மருத்துவ கல்லுாரியில் புதுச்சேரிக்கு-10; காரைக்கால்-2; மாகி, ஏனாம்-1 என 13 சீட்டுகள் கிடைக்கும். தனியார் மருத்துவ கல்லுாரிகளில் பிம்ஸ்-6; மணக்குளவிநாயகர் மற்றும் வெங்கடேஸ்வராவில் தலா 9 சீட்டுகள் கிடைக்கும்.
கவர்னர் தமிழிசை நன்றி
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மக்கள் சார்பாக கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த உள் ஒதுக்கீட்டிற்காக பணியாற்றிய முதல்வர் தலைமையிலான அரசு,எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்