எதிர்காலத்தை உருவாக்கி, கனவுகளை ஊக்குவிப்பவர்கள் – ஆசிரியர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆசிரியர்களின் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”நமது எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கனவுகளை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த ஆசியர் தின நாளில் அவர்களின் அயராத அர்ப்பணிப்புக்கும், அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் சிறந்த தாக்கத்துக்கும் நாம் அவர்களை வாழ்த்தி வணக்குவோம். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் திங்கள்கிழமை நடத்திய உரையாடலின் வீடியோவினை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவரது இல்லத்தில் உரையாடல் நடந்தது. அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் இருந்தார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நாடுமுழுவதிலும் இருந்து 75 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தன்று (செப்.5) நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்குவார். இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவைகளைக் கொண்டிருக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று கல்வி அமைச்சகம், பள்ளிக் கல்வித்துறை இணைந்து நாடுமுழுவதிலுமுள்ள சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று இந்த விழாவினை நடத்துகின்றது. இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 50 பேர் பள்ளி ஆசிரியர்கள், 13 பேர் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், 12 பேர் திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாட்டுக்கான ஆசிரியர்களின் பங்களிப்பை கொண்டாடுவதோடு மட்டும் இல்லாமல், தங்களின் அர்ப்பணிப்பு மூலமாக கல்வித் தரத்தினை உயர்த்துவதோடு மட்டும் இல்லாமல் தங்களின் மாணவர்களின் வாழ்வினை வளப்படுத்துவதினை கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தாார்.

முன்னதாக, ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் துணைக்குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத ரத்னா விருது பெற்ற ராதாகிருஷ்ணன், இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகவும்(1952 – 1962), இரண்டாவது குடியரசுத் தலவைராகவும் (1962 – 1967) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.