சென்னை: சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்கு போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
சனாதன சர்ச்சை: சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இவரது பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவர் மீது புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
மிரட்டல்... முன்னதாக சனாதனம் குறித்து பேசியதற்காக அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரகாம்ச ஆச்சாரியா என்பவர் அறிவித்ததோடு, அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த மிரட்டலுக்கு பதிலளிக்கும் விதமாக தூத்துக்குடியில் நடந்த திமுக விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனது தலையை சீவ ரூ.10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு போதுமே” என்றும் தெரிவித்திருந்தார்.
கூடுதல் பாதுகாப்பு: இதைத்தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதியின் இல்லத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் வசிப்பதால், அந்தப்பகுதியில் எப்போதுமே காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவர். சனாதன சர்ச்சையைத் தொடர்ந்து இங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்று போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்டி, அவரது வீட்டை முற்றுகையிட இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்துக்கு முன்பாகவும், வீட்டினுள்ளும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தச் சாலையின் வழியே வருகின்ற வாகனங்களை போலீஸார் சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலாங்கரை இல்லத்திலும்… மேலும், அமைச்சர் உதயநிதியின் நீலாங்கரை இல்லத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.