ஒரே நாடு ஒரே தேர்தல்: எதிர்ப்பும் ஆதரவும்… தலைவர்கள் சொல்வதென்ன?! | Visual Story

“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற பாஜக-வின் கோரிக்கை இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்ற மக்களவைக்கும் தேர்தல் என்ற முறை!

இந்தியாவில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடக்க காலங்களில் அமலில் இருந்தாலும் சில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதாலும், மக்களவை கவிழ்ப்பு காரணமாகவும் அது அந்த வழக்கத்தில் இருந்து விலகியது.

தற்போது மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?!

“பாஜக அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முனைப்பு, தேசத்தின் கூட்டாட்சி அமைப்பைக் குலைப்பதற்கான ஒரு அப்பட்டமான முயற்சி. இந்த திடீர் அறிவிப்பும், அதைத் தொடர்ந்து அதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டதும் சந்தேகங்களைத் தூண்டுகிறது. #OneNationOneElection என்பது #சர்வாதிகாரத்துக்கான செய்முறையே தவிர #ஜனநாயகம் அல்ல” – மு. க. ஸ்டாலின்

“ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். இம்முயற்சி நடைமுறைக்கு வந்தால், ஜனரஞ்சகத் திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும்,” என ஆதரவு தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, 2018-ல் இத்திட்டத்திற்கான கடும் எதிர்ப்பை இவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முடிவு அவசியமற்றது, தேவையற்ற ஒரு முடிவு, மேலும் இது ஒரு சுத்த பைத்தியக்காரத்தனம். ஒரு தொகுதியிலுள்ள ஒரு உறுப்பினர் இறந்து விட்டால், அந்த குறிப்பிட்ட தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவது சரியா? அல்லது நாடு முழுவதும் அதற்காக தேர்தல் நடத்த வேண்டுமா? இது எப்படி செலவை குறைக்கும் என்று புரியவில்லை.” – சீமான்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஒரே நாடு, ஒரே தேர்தல்கள் என்று கொண்டு வந்தால், சாமானியனுக்கு என்ன கிடைக்க போகிறது? ஒரே நாடு, ஒரே கல்வி என்று கொண்டுவர வேண்டும். ஒரே நாடு, ஒரே சுகாதார சிகிச்சை என்று கொண்டு வர வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற யோசனையை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். ஓட்டுக்காக பணியாற்றாமல், நாட்டிற்காக பணியாற்றுங்கள்” என்றுள்ளார்.

காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கி இருப்பது, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைத் தகர்ப்பதற்கான ஒரு சூழ்ச்சியாக கருதப்படுகிறது. ஜனநாயக இந்தியாவை, சர்வாதிகார இந்தியாவாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது,” என்கிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம். இத்திட்டம் என்பது இந்தியா மற்றும் அதன் மாநிலங்களின் மீது தாக்குதல் தொடுக்கும் வகையில் அமைந்துள்ளது,” என்று சாடியுள்ளார்.

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று குறிப்பிடப்படும் நாடு முழுவதுமான ஒரே தேர்தல் என்ற யோசனை, இந்தியாவை “இந்து ராஷ்டிரா” என்று மாற்றுவதற்காக “பாசிச பாஜக” எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டம்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, “ஒரே தேர்தல் என்பது செலவை குறைக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இது உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டுமே சரியானதாக இருக்கும். இப்படி ஒரே தேர்தல் நடத்தி முடித்த பிறகு, மத்திய அரசு கவிழ்ந்தால், அதற்காக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமா? ‘ப்ராக்டிகல்’-ஆக முடிவு எடுங்கள்.” என்றார்.

ஜார்கண்ட் மாநில ஆளுநரான சி.பி ராதாகிருஷ்ணன், “இந்நேரத்தில் இந்த முடிவு மிகவும் அவசியமானதொன்றாகும். ஜனநாயகம் முதலியவற்றில் முன்னேறி வரும் இந்தியா போன்ற நாட்டிற்கு இது மிகவும் அவசியம்,” என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, “வெவ்வேறு ஆண்டுகளில் தேர்தல் நடைபெற்றால் எப்படி ஒரு அரசு அதிகாரியால் சரியாக வேலை செய்ய முடியும்? ஏழை மக்களுக்காக பாடுபட வேண்டிய அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்தி முடிப்பதற்கே நேரம் சரியாகி விடுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், அனைத்து அரசு அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து அதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். அதன் பிறகு முழுக்க முழுக்க மக்களுக்காகவே பணியாற்றுவார்கள்.” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல் நாத், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு, அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டும் போதாது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் ஒப்புதலும் இதற்கு மிகவும் அவசியம். பாஜக ஆளும் மாநிலங்களில் வேண்டுமானால் சட்டமன்றத்தை கலைத்து இதை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமாகலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் அதுபோல நடப்பது என்பது கடினம்,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.