இந்திய கிரிக்கெட் அணியின் வீரேந்திர சேவாக் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என ஜெர்சியில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த பதிவு அரசியல் தளத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதில் கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஒரு காலத்தில் காம்பீர் மற்றும் சேவாக் இந்திய அணிக்காக ஓப்பனிங் இறங்கிய நிலையில், ஓய்வு பெற்ற பிறகு காம்பீர் பாஜகவில் சேர்ந்து எம்பியாகிவிட்டார். ஆனால் சேவாக் விளையாட்டு தளத்திலேயே இன்னும் இருக்கிறார். காம்பீரைப் பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருப்பார். குறிப்பாக விராட் கோலியை அவருக்கு பிடிக்காது என்பதால் அவர் குறித்து ஏதாவதொரு சர்ச்சைக் கருத்தை கூறுவார். இப்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வர்ணையாளராக இருக்கும் காம்பீர், மைதானத்துக்கு வெளியே செல்லும்போது ரசிகர்கள் கோலி கோலி என கூச்சலிட்டதால் அவர்களை நோக்கி ஆபாசமாக சைகை செய்தார். இது பொதுவெளியில் சர்ச்சையானது.
மேலும்படிக்க | விராட் கோலி தான் அந்த பட்டப் பேரு வச்சாரு – சிலாகிக்கும் முகமது ஷமி
அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனை நேரடியாக குறிப்பிடாமல் ரசிகர் ஒருவர் சேவாக்கிடம் கேள்வி எழுப்பினார். அதில் கிரிக்கெட் வீரர்கள் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த சேவாக், தனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என கூறினார். இரு பெரிய கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வந்தாகவும் ஆனால் அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு விளையாட்டு வீரராகவே தான் அறியப்பட வேண்டும் என விரும்புவதாகவும், ஆணவத்திற்கும், அதிகார பசிக்கும் அரசியலில் ஈடுபடுவதை தான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். இதேபோல் சினிமா பிரபலங்களும் அரசியலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்ட சேவாக், இத்தகையவர்கள் பொதுவாக ஈகோ பிரச்சனைக்காக அரசியல் களத்தில் குதிப்பதாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், சேவாக் பொதுவாக சொன்ன கருத்தை காம்பீர் மீது வஞ்சம் கொண்டு பேசியதாக ரசிகர்கள் திரித்து கூறுவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.