தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் `சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று பேசியது நாடெங்கும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இது பற்றி அம்மாநாட்டில் பேசிய உதயநிதி, “‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், ‘சனாதன ஒழிப்பு’ மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்குகாய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். இந்த மாநாட்டுக்கு மிகப்பொருத்தமாகத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுகள்.
சனாதனம் அப்படிங்கிற பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானதுதான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்” என்று பேசியிருந்தார்.
உதயநிதியின் இந்தப் பேச்சு, ‘இந்து சனாதனத்தின் மீதும் கலாசாரத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்’ என்று பா.ஜ.க தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்படப் பல இந்து அமைப்புகள் உதயநிதியின் பேச்சுக்குத் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி டெல்லி, பீகார் எனப் பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்து அமைப்பினர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசளிப்பதாகப் பேசியெல்லாம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கிடையில் சமூகவலைதளம் மட்டுமல்லாது தேசிய மற்றும் இந்தி ஊடகங்களிலும் அமைச்சர் உதயநிதி பேசியதுதான் விவாதமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் உதயநிதியின் பேச்சுக்கு, “மக்களின் சமத்துவத்திற்கானது, சமூக நீதியை வலியுறுத்துவது. சனாதனம் ஒழிப்பு பற்றி அவர் பேசியதை ஆதரிக்கிறோம்” எனப் பல்வேறு தலைவர்கள் அவருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இயக்குநர் பா.இரஞ்சித், உதயநிதிக்கு ஆதவரவாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுக்கும் பேச்சு என்பது பல நூற்றாண்டுகளாகச் சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகவே இருப்பதாகும். சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் நிகழும் மனிதத் தன்மையற்ற செயல்கள்தான் சனாதன தர்மத்தில் உள்ளது. புரட்சித் தலைவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார், மகாத்மா பூலே, துறவி ரவிதாஸ் போன்ற சாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதையே வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சரின் பேச்சைத் திரித்து ‘இனப்படுகொலைக்கான அழைப்பு இது’ என்று தவறாக இந்த வீடியோவைப் பயன்படுத்தும் கேடுகெட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைச்சரின் மீது அதிகரித்து வரும் வெறுப்பும் வெறியும் மிகவும் கவலையளிக்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் கருத்துக்குத் துணை நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.