புதுடில்லி ‘தமிழக அமைச்சர் உதயநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு மீது, நீதிமன்ற அவதுாறு வழக்கை, தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
‘சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது; அதை ஒழிக்க வேண்டும்’ என, தி.மு.க.,வைச் சேர்ந்த முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
அவருடைய இந்தக் கருத்து, நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நாடு முழுதும் வழக்குகளும், போலீசில் புகார்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூடுக்கு, 262 பிரமுகர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
புதுடில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என். திங்கரா உட்பட, 14 முன்னாள் நீதிபதிகள், மத்திய அரசின் முன்னாள் கப்பல் துறை செயலர் கோபால கிருஷ்ணா உட்பட, 130 முன்னாள் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 118 முன்னாள் ராணுவ உயரதிகாரிகள் இதில் அடங்குவர்.
கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
வெறுப்பு பேச்சு தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அனைத்து மதத்தினர், சமூகத்தினர் நல்லிணக்கத்துடன் வாழாவிட்டால், நாட்டில் அமைதி இருக்காது என்று அப்போது குறிப்பிடப்பட்டது.
நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கும் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக புகார்கள் வராவிட்டாலும், மாநில அரசுகள் மற்றும் போலீஸ் நிர்வாகம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
நம்முடைய அரசியல் சாசனம், இந்த நாட்டில் மதச்சார்பின்மையை ஊக்குவிக்கிறது. அதற்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் வெளியிடப்படும்போது, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அது நீதிமன்ற அவமதிப்பாகும்.
சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி கூறியுள்ள கருத்து, வெறுப்பு பேச்சாகும். இது சர்ச்சையான பின்னும், தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காமல், தொடர்ந்து அவ்வாறு பேசுவேன் என அவர் கூறியுள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. வெறுப்பு பேச்சை வெளியிட்ட உதயநிதியின் மீது, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசு மறுத்துள்ளது.
நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள மக்களுக்கு எதிராக உதயநிதி கூறியுள்ள கருத்து, நம் அரசியல் சாசனம் வகுத்துள்ள மதச்சார்பின்மை மீதான தாக்குதலாகும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது, நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும், நாட்டின் சட்ட நடைமுறைகளை குறைவாக மதிப்பிட்டுள்ளதுடன், அதை கேலி செய்வதாக அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழக அரசு தன் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், அதன் மீது நீதிமன்ற அவதுாறு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேசியது தவறு!
நானும் சனாதன தர்மத்தை சேர்ந்தவன்தான். யாராக இருந்தாலும், மற்ற மதத்தினரை மதிக்க வேண்டும்; அவற்றுக்கு எதிராக பேசக் கூடாது. குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக பேசுவது தவறு.
அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடில்லி முதல்வர், ஆம் ஆத்மி
ஹிட்லரின் மனநிலை!
உதயநிதியின் பேச்சுக்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ., சார்பில், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள பதிவு:சனாதன தர்மத்தை பின்பற்றும் நம் நாட்டின் 80 சதவீத மக்களை கொல்ல வேண்டும் என்று உதயநிதி கூறியுள்ளது திட்டமிட்டு பேசியதாகும். இந்த விஷயத்தில், அவருடைய பேச்சுக்கு எந்த கண்டனமும் தெரிவிக்காமல், காங்கிரஸ் உள்ளிட்ட, ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் மவுனம் காப்பது பேராபத்து.சர்வாதிகாரி ஹிட்லரின் மனநிலையிலேயே, ஸ்டாலினின் மகனான உதயநிதி உள்ளார். ஹிட்லர், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய யூதர்களை எப்படி கொன்றார்; சிறையில் இருந்த, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கைதிகளை எப்படி கொன்றார் என்பது நமக்கு தெரியும். அதுபோன்று உள்ளது உதயநிதியின் பேச்சு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுப்ரமணியன் சுவாமி வழக்கு
தமிழக அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கும்படி, தமிழக கவர்னர் ரவிக்கு, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:சனாதன தர்மம் குறித்து உதயநிதி கூறியுள்ள கருத்து, இந்திய தண்டனை சட்டத்தின் பல பிரிவுகளின்படி குற்றமாகும். இந்தக் குற்றவாளி இடம்பெற்றுள்ள தி.மு.க., தற்போது மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. அவருடைய பேச்சு, சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களிடையே அச்சம், பாதுகாப்பில்லாத உணர்வை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியின் பேச்சால், வன்முறை, மத மோதல் ஏற்படுமோ என்ற அச்சமும் மக்களிடயே உள்ளது.இந்தக் குற்றவாளி மீது, கிரிமினல் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன். அவர் அமைச்சராக உள்ளதால், வழக்கு தொடர்வதற்கு, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 196வது பிரிவின் கீழ், ஒப்புதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்