ரூ.10 சீப்பு போதும்… கூலாக பதில் சொன்ன உதயநிதி – மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த சாமியார்!

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் மலேரியா, டெங்குவைப் போன்றது எனவும் சனாதனத்தை எதிர்க்காமல் அழிக்க வேண்டும் எனவும் பேசினார். கடந்த இரண்டு நாட்களாக இதுதொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் எதிரொலித்த நிலையில், பாஜக தலைவர்கள் வரிசைகட்டி உதயநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அத்துடன், உதயநிதி மீது டெல்லி, பீகார் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக தனது பேச்சை திரிப்பதாகத் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்கிற தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்த சவால்களை சந்திக்கத் தயார் என்றும் கூறியிருந்தார். இதனிடையே அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் என்பவர், சனாதனம் குறித்து தவறாக பேசிய உதயநிதியின் தலையைக் கொண்டு வந்தால் ரூ.10 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தது சர்ச்சையானது.

ஆனால், தனது தலையை சீவ எதற்கு 10 கோடி ரூபாய், வெறும் 10 ரூபாய் சீப்பு போதுமே என்று உதயநிதி நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். உதயநிதிக்கு பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரது கிரீன்வேஸ் சாலை மற்றும் நீலாங்கரை வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சனாதனத்தை ஒழிக்க அதிக உறுதியோடு இருக்கிறேன் – உதயநிதி

இந்த நிலையில் உதயநிதிக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா. அவர் அளித்துள்ள பேட்டியில், “சனாதன தர்மத்தை அவமதித்ததை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாட்டில் எந்த வளர்ச்சி ஏற்பட்டாலும் அதற்கு சனாதன தர்மம்தான் காரணம். உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நாட்டிலுள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை புன்படுத்தியுள்ளார். உதயநிதி தலையை துண்டிக்க 10 கோடி ரூபாய் போதவில்லை என்றால் சன்மானத்தை இன்னும் உயர்த்தித் தருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக நிர்வாகிகள், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.