சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.6) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங் களில் புதன்கிழமை (செப்.6) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செப்.7-ம் தேதி முதல் செப்.9-ம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.