யாரு கண்ணு பட்டுச்சோ!
புல்லுக்கட்டு கட்சி தலைவரு தொட்டகவுடர் குடும்பத்துக்கு, இது போதாத காலமா இருக்கு. குமரண்ணருக்கு உடம்பு சரியில்லாம போச்சு. பேரனோட எம்.பி., பதவி பறிபோச்சு. இப்போ அவரோட மூத்த மகன் ரேவண்ணருக்கும், கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருக்கு. இப்படி அடிக்கு மேல அடி விழுறதுனால, தொட்டகவுடரும், புல்லுக்கட்டு கட்சி தொண்டர்களும் வேதனையில இருக்காங்க. யாரு கண்ணு பட்டுச்சோன்னு, இப்படி நடக்குதேன்னு புலம்பிட்டு இருக்காங்களாம்.
நொந்து போன முதல்வர்!
பல போராட்டங்களுக்கு அப்புறம் எப்படியோ, பதவி கிடைச்சுட்டுன்னு முதல்வர் சித்து சந்தோஷமாக இருந்தாரு. ஆனா கொஞ்ச நாளா அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையில நடக்குற சண்டையால, முதல்வரு ரொம்ப நொந்து போய் இருக்காராம். சும்மா, சும்மா எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதுறதுனால ரொம்ப ‘அப்செட்’ ஆயிருக்காரு. ஒருபக்கம் து.முதல்வரோட குடைச்சல், இன்னொரு பக்கம் எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னைன்னு, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி, அப்படின்னு சொல்றது போல ஆயிருக்கு முதல்வரோட நெலம.
தொண்டர்கள் குழப்பம்!
தாமரை கட்சியோட தேசிய பொதுச் செயலரு சமீபத்துல, கர்நாடகா தாமரை கட்சித் தலைவர்கள் கூட, ஆலோசனை நடத்துனாரு. கை கட்சி எம்.எல்.ஏ., நம்ம கட்சிக்கு வர தயாரா இருக்காங்கன்னு சொன்னாரு. அவரு அப்படி சொல்லவே இல்லன்னு, கூட்டத்துல கலந்துகிட்ட முன்னாள் அமைச்சரு ஒருத்தரு சொல்லி இருக்காரு. ஆனா இன்னொரு முன்னாள் அமைச்சரு, கை கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பத்தி, பொதுச் செயலரு சொன்னது உண்மை தான்னு சொல்லியிருக்காரு.
இதனால தாமரை கட்சித் தொண்டர்கள் குழப்பத்துல இருக்காங்க.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement