நாட்டின் பெயர் ’இந்தியா’ இல்ல ’பாரத்’… எது உண்மை? மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல்!

மத்திய அரசு அறிவித்துள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நெருங்கி கொண்டிருக்கிறது. வரும் 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எந்தவித நிகழ்ச்சி நிரலும் இன்றி கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் வலுத்த வண்ணம் இருக்கின்றன. ஒருவேளை ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுமா? பொது சிவில் சட்டமாக இருக்குமா? என தேசிய அரசியல் களம் தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தது.

ஜி20 மாநாடு அழைப்பிதழ்

அனைத்தையும் ஓரங்கட்டும் வகையில் ஒரு விஷயம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. வரும் 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 9ஆம் தேதி இரவு 8 மணிக்கு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் “The President of Bharat” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா பெயர் மாற்றம்

சுதந்திர இந்தியாவில் இதுவரை “The President of India” என்று தான் பார்த்திருக்கிறோம். இதென்ன புதிதாக இருக்கிறது? என யோசித்து கொண்டிருக்கும் போதே பாஜக மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ‘பாரத்’ என்பதை பெருமையாக கருதுகிறோம் என பதிவிடவும், பேசவும் தொடங்கி விட்டனர். உடனே விஷயம் தேசிய அளவில் தீயாய் பரவத் தொடங்கியது. ஆதரவு மற்றும் எதிரான கருத்துகள் வந்து குவியத் தொடங்கிவிட்டன.

சிறப்பு கூட்டத்தொடர்

எனவே வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நமது நாட்டின் பெயரே மாற்றப்பட்டு விடுமா? இதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்து விடுவார்களோ? என்ற சந்தேகம் எழுந்தது. அப்படி எதுவும் இல்லை என்று மத்திய அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தனியார் செய்தி இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது, வதந்திகள் தாறுமாறாக பரவி கொண்டிருக்கின்றன. இதுதான் உண்மை.

அமைச்சர் அனுராக் தாகூர் விளக்கம்

பாரத் சர்காரின் அமைச்சர் நான். இதில் என்ன புதிய விஷயம் இருக்கிறது. ஜி20 மாநாட்டிற்கான பிராண்டிங், லோகோ ஆகியவற்றிலேயே பாரத் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு விட்டது. அப்புறம் எதற்காக பாரத் என்பதில் இவ்வளவு எதிர்ப்புகள் வருகின்றன. பாரத் என்பதை யாராவது எதிர்த்தால், அது தேசத்திற்கு எதிரான மனநிலையை தான் காட்டுகிறது. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறோம்.

பாரத் என மாற்றமா?

இந்தியா என்ற பெயர் எங்கேயும் புறக்கணிக்கப்படவில்லை. ஜி20 பிராண்டிங்கில் இந்தியா மற்றும் பாரத் என இரண்டு பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஓராண்டாகவே இப்படித் தான் விளம்பரம் செய்து வருகிறோம் என்று அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். இதன்மூலம் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்றப்படாது என்பது தெளிவாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.